விராட் கோலி ரொம்பவே தைரியசாலி, நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்காம தில்லா பேட்டிங் செஞ்சாரு – 2018 பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

Sridhar
- Advertisement -

ஜாம்பவான் தோனிக்கு பின் 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தி வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் உலக கோப்பையை வெல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக விமர்சனத்தை சந்தித்து கடைசியில் சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த உலகிற்கே புதிய பாடத்தை கற்றுக் கொடுத்தார் என்று சொல்லலாம். ஏனெனில் டெஸ்ட் போட்டியை ட்ரா செய்வது மோசமான அணுகுமுறை என்ற கூற்றைக் கொண்டிருந்த அவர் தோற்றாலும் பரவாயில்லை வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டிருந்தார்.

kohli

- Advertisement -

அதை செயலிலும் பின்பற்றிய அவர் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக வலம் வர வைத்தார். குறிப்பாக 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றிய அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் மறக்க முடியாத சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

ரொம்ப தைரியசாலி:
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரது வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு தைரியமும் தன்னம்பிக்கையுமே முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக கடந்த 2018ஆம் ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்பாக பேட்டிங்க்கு சவாலான கைவிடப்பட்ட பிட்ச்சில் இதர வீரர்கள் பயப்பட்ட போது அதில் தான் பயிற்சி எடுப்பேன் என்று அடம் பிடித்து விராட் கோலி பயிற்சி எடுத்ததாக முன்னாள் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

kohli 1

இது பற்றி தனது சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “2018 இங்கிலாந்து சுற்று பயணத்திற்கு முன்பாக நாங்கள் ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்காக தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது தென்னாபிரிக்காவில் எங்களுக்கு கவுண்டி தொடரில் விளையாடும் ஒரு மைதானம் பயிற்சி எடுப்பதற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த பிட்ச் மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அதனால் மையப்பகுதியில் ஓரளவு நன்றாக இருந்த பிட்ச்சில் நாங்கள் பயிற்சி எடுத்தோம்”

- Advertisement -

“ஆனால் பக்கவாட்டில் இருந்த பிட்ச்சுகள் கேப் டவுனில் உள்ள மேற்கு மாகாணத்தில் இருக்கும் இதர பிட்ச்களின் தரத்தை காட்டிலும் வெகு தொலைவில் இருந்தது. குறிப்பாக அது மிகவும் ஆபத்தாக இருப்பதால் யாரும் பேட்டிங் செய்வதில்லை என்பதை விராட் கோலி பார்த்து அறிந்து தெரிந்து கொண்டார். உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்ட அவர் என்னையும் ரகுவையும் அழைத்துச் சென்று அந்த பிட்ச்சில் பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அதை செய்ய வேண்டாம் என்று அவருக்கு நாங்கள் எவ்வளவோ எடுத்துரைக்க முயற்சித்தோம்”

Sridhar

“இருப்பினும் அதை ஏற்க மறுத்து விட்ட அவர் “நான் இந்த ஆபத்தான இடத்தில் பயிற்சி எடுக்க விரும்புகிறேன். குறிப்பாக ரகுவின் அதிவேகமான பந்துகளை இந்த இடத்தில் நான் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என்று எங்களிடம் தெரிவித்தார். அது போன்ற கடினமான பயிற்சிகளை தான் அவர் ஒவ்வொரு முறையும் எடுத்துக் கொண்டார். அதாவது ஒவ்வொரு முறையும் பயிற்சியின் போது அழுத்தமான சூழ்நிலையில் வேண்டுமென்றே தன்னை உட்படுத்திக்கொண்டு அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்பதை அவர் கற்றார். அந்த வகையில் தன்னுடைய நுணுக்கங்களை மெருகேற்றிய அவர் அதை செய்வதற்கு மனதளவிலும் மிகவும் தைரியமானவராக இருந்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: எனக்கு அப்றம் இனிமேல் இவர் தான், தனது சாதனையை முறியடித்த சுப்மன் கில் பற்றி விராட் கோலி கூறியது இதோ

அப்படி அதிரடியான தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருந்த காரணத்தாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி, கங்குலி போன்ற ஜாம்பவான் கேப்டன்களை மிஞ்சி விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement