
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் இந்தியா தோற்கடித்தது. அதனால் சமநிலையில் இருக்கும் இத்தொடரின் 3வது போட்டியில் வென்று முன்னிலை பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுத்து புத்துணர்ச்சியாக மீண்டும் விளையாட வந்துள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஆகாஷ் தீப், சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய பேய் போன்ற பவுலிங் அட்டாக் இந்தியாவை வெற்றி பெற வைப்பார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். மறுபுறம் ஜோ ரூட் பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி 60 ஓவர்களில் இங்கிலாந்துக்கு நரகத்தைக் காட்ட வேண்டும் என்று சொல்லி இந்தியாவை விராட் கோலி வெற்றி பெற வைத்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சிராஜ் அதிக ஓவர்கள் வீசியுள்ளதால் ஓய்வு கொடுக்கலாம் என்று சிலர் சொல்லலாம்”
“ஆனால் அவருடைய பவுலிங் ஆக்சன் பும்ரா போல தனித்துவமானது கிடையாது. எனவே பும்ரா அளவுக்கு அவர் காயத்தைச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கும் சூழ்நிலையில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். சிராஜ், ஆகாஷ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் பவுலிங் அட்டாக் பேய் போல காட்சியளிக்கிறது”
“லார்ட்ஸ் பிட்ச்சில் அவர்களுக்கு கொஞ்சம் உதவி கிடைத்தால் பேய் என்று சொல்வது சரியான வார்த்தையாகும். ஸ்டுவர்ட் ப்ராட் சொன்னது போல இந்த மைதானத்தில் நிறைய எல்டபுள்யூ விக்கெட்டுகளைப் பார்க்க முடியும். இத்தொடர் ஜோ ரூட் பற்றி குறைவாகவும் சுப்மன் கில் பற்றி அதிகமாகவும் அமைய துவங்கியுள்ளது. அங்கே தான் இந்தியாவும் வென்றது. எனவே இங்கிலாந்து தங்களுடைய வேகப்பந்துவீச்சுத் துறையை மறுசீரமைக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய அணி சுதர்சனுக்கு அநியாயம் பண்ணாம.. அவருக்கு பதில் விளையாட வைக்கனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு
“கடந்தப் போட்டியில் அவர்களுடைய பவுலிங் அட்டாக் பாதசாரிகள் போல இருந்தது. மறுபுறம் ஜோ ரூட் கட்டப்பட்டது போல் தெரிகிறார். ஒருவேளை அவர் பெரிய ரன்கள் குவித்தால் இங்கிலாந்துக்கு வாய்ப்பிருக்கும். இல்லையேல் இந்தியா இப்போட்டியை வெல்லும். கடைசியாக 2021 லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்துக்கு 60 ஓவர்கள் நரகமாக இருக்க வேண்டுமெஎன்று விராட் கோலி சொன்னார். இப்போதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்ட டெக்னிக் சரியாக இல்லை. சொல்லப்போனால் 2021 விட தற்போது அது மோசமாக இருக்கிறது” என்று கூறினார்.