இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ள 3வது போட்டியிலும் வென்று முன்னிலைப் பெற இந்தியா தயாராக உள்ளது.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். உள்ளூர், கவுன்டி மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் துரதிஷ்டவசமாக முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் 2வது இன்னிங்ஸில் 30 ரன்கள் அடித்த அவரை 2வது போட்டியிலேயே இந்திய அணி கழற்றி விட்டது.
சுதர்சனுக்கு வாய்ப்பு:
குறிப்பாக அணியின் சேர்க்கைக்காக நித்திஸ் ரெட்டியை விளையாட வைப்பதற்காக சாய் சுதர்சன் வேறு வழியின்றி கழற்றி விடப்பட்டார். கடைசியில் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் 3வது போட்டியிலும் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாமாக இருந்தால் கருண் நாயரை கழற்றி விட்டு வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிப்பேன் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் நான் ஏற்றுக் கொள்ளாத சில சுவாரசியமான தேர்வுகள் செய்யப்பட்டன. கடைசியில் நாம் பெற்ற வெற்றி அந்த முடிவுகளை மூடி மறைத்தது. சாய் சுதர்சனை ஒரு போட்டியுடன் நீக்கியது சரி என்று நான் நினைக்கவில்லை. வருங்காலத்திற்காக திட்டங்களை வகுக்கும் நாம் அவரை போன்ற இளம் வீரரை புறக்கணிக்கக் கூடாது”
மஞ்ரேக்கர் ஆதரவு:
“2வது இன்னிங்ஸில் அவர் ஓரளவு நன்றாகவே விளையாடினார். எனவே நான் அவரைத் தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன். ஆனால் இந்த இந்திய அணி நிர்வாகம் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாற்றங்களை செய்யத் தயங்குவதில்லை. இருப்பினும் நான் சாய் சுதர்சன் 3வது இடத்தில் விளையாடுவதை விரும்புகிறேன். என்னுடைய புத்தகத்தில் கருண் நாயர் 3வது இடத்தில் பொருத்தமானவர் கிடையாது”
இதையும் படிங்க: என்னுடைய டெஸ்ட் கரியரை முடித்துவைத்தது ரவி சாஸ்திரி தான்.. சிரித்துக்கொண்டே விளக்கமளித்த – தினேஷ் கார்த்திக்
“சுதர்சனை வெறும் ஒரு போட்டியுடன் நீக்குவது நியாயமற்றது. ஏனெனில் அந்தப் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய சதங்கள் அடித்தார்கள். எனவே சுதர்சன் இன்னும் நிறைய வாய்ப்புகளுக்குத் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். இதற்கிடையே 8 வருடம் கழித்து கம்பேக் கொடுத்துள்ளதால் கருண் நாயருக்கு இன்னும் சில வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



