இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை 257 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். என்னதான் திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் தோனியின் இருப்பு காரணமாக அவருக்கு இந்திய அணியில் பெரியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரவி சாஸ்திரி தான் என்னுடைய டெஸ்ட் கரியரை முடித்து வைத்தார் : தினேஷ் கார்த்திக்
2004-ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டிகளில் தோனிக்கு முன்னதாக அறிமுகமாகி இருந்தாலும் பின்னர் தோனியின் அசுர வளர்ச்சி காரணமாக அவ்வப்போது இந்திய அணிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆடி வந்தார். ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாகவே செயல்பட்டார். இறுதிவரை ஒரு பெரிய இடமில்லாமல் கிரிக்கெட்டை விட்டு வெளியேறி தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய டெஸ்ட் கரியர் எப்படி முடிவுக்கு வந்தது என்றும் ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தைகள் என்ன? என்பதையும் அவர் தற்போது ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற உரையாடலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பது குறித்தும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதாகவும் சில தகவல்களை பகிர்ந்தார்.
பின்னர் அவரை தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : உங்களுக்கு எவ்வாறு லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்ததோ அதேபோன்று தான் எனக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தான் டெஸ்ட் கரியர் முடிவுக்கு வந்தது. நீங்கள் உங்களுடைய பயிற்சியாளரின் அறையின் கதவை தட்டி என்னுடைய கடைசிப் போட்டி என்று கூறினீர்கள்.
ஆனால் இங்கு வித்தியாசமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்னை சந்தித்து அடுத்த போட்டி குறித்து நீ யோசிக்க தேவையில்லை. இதுதான் உன்னுடைய கடைசி போட்டி என என்னுடைய கரியரை முடித்து வைத்தார் என்று தினேஷ் கார்த்திக் சிரித்துக்கொண்டே கூறினார். இதைக்கேட்டு அருகில் இருந்த ரவி சாஸ்திரி அவருடைய தோள்களை தட்டிக் கொடுத்தார்.
இதையும் படிங்க : 22 ரன்ஸ்.. மூழ்கிய எம்ஐ அணியை பேட்டிங்கில் தூக்கி நிறுத்தி மாஸ் காட்டிய போல்ட்.. டிஎஸ்கே’வுக்கு சவால்
கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு டெஸ்ட் போட்டியின் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அறிமுக வாய்ப்பில் சதம் அடித்த அவர் தற்போது வரை மிகச்சிறப்பாக செயல்பட்டு இன்றளவும் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



