அமெரிக்காவில் மேஜர் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அத்தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தைப் பிடித்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மழையால் ஏமாற்றத்தைச் சந்தித்து குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு டாலஸ் நகரில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடங்களைப் பிடித்த சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
மூழ்கிய எம்ஐ:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பிரான்சிஸ்கோவை சிறப்பாக பவுலிங் செய்த எம்ஐ நியூயார்க் 19.1 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அசத்தியது. அதிகபட்சமாக கூப்பர் கோன்லி 23, கேப்டன் சேவியர் பார்லட் 44 ரன்கள் எடுத்தார்கள். எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக ருசில் உக்கர் 3, ட்ரெண்ட் போல்ட் 2, நோஸ்துஷ் கெஞ்சி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக 132 ரன்களை துரத்திய எம்ஐ எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த அணிக்கு அதிரடியாக 33 (24) ரன்கள் எடுத்த குவிண்டன் டீ காக்’கை அவுட்டாக்கிய மேத்தியூ ஷார்ட் அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரானை 1 ரன்னில் போல்டாக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் நிதானமாக விளையாடிய மோனக் பட்டேல் 33 (32) ரன்னில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் மைக்கேல் பிரேஸ்வெல் 18, காட்டடி பேட்ஸ்மேன் பொல்லார்ட் 5, திலோன் 4, ஹீத் ரிச்சர்ட்ஸ் 0, ட்ரிஸ்டன் லஸ் 8 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
மாஸ் காட்டிய போல்ட்:
அதனால் 17 ஓவரில் 108/8 என சரிந்த எம்ஐ தோல்வியின் பிடியில் மூழ்கியதால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அட்டகாசமாக பேட்டிங் செய்த ட்ரெண்ட் போல்ட் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 22* (13) ரன்கள் எடுத்தார். அவருடன் நோஸ்துஷ் கெஞ்சி 3* (5) ரன்களை எடுத்ததால் 19.3 ஓவரில் 132/8 ரன்கள் எடுத்த எம்ஐ நியூயார்க் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: 6க்கு 6.. இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய சிங்கப்பெண்கள் அணி.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை வெற்றி
அதனால் நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் டெக்ஸாஸை எதிர்கொண்டு சவாலாக எம்ஐ நியூயார்க் அணி தகுதி பெற்றது. அப்போட்டியில் ஐபிஎல் தொடரில் மும்பை – சென்னை அணிகளின் கிளைகளான அவ்விரு அணிகள் மோதுவது இந்திய ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ ஷார்ட் 3, ஹசன் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை சந்தித்த பிரான்சிஸ்கோ அணி தொடரிலிருந்து வெளியேறியது.



