
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த அத்தொடரின் 4வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோல்ட் கோஸ்ட் மைதானத்தில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 46, அபிஷேக் ஷர்மா 28, சிவம் துபே 22, அக்சர் பட்டேல் 21*, கேப்டன் சூரியகுமார் 20 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 119 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் பட்டேல் 2, சிவம் துபே 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ராவை விட வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்துவதாக ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போல பேட்டிங்கில் அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு சவாலைக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே 2026 டி20 உலகக் கோப்பையில் எதிரணிகள் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமெனில் அதற்கு முதலில் அந்த 2 வீரர்களை தாண்ட வேண்டுமென்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நடைபெறும் (2026) டி20 உலகக் கோப்பையை எந்த அணிகள் வெல்ல விரும்பினாலும் அதற்கு அவர்கள் 2 விஷயங்களில் மாஸ்டராக இருக்க வேண்டும். இதுவரை அதற்கு ஜஸ்ப்ரித் பும்ராவை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லி வந்தேன். ஆனால் தற்போது டிம் டேவிட்டை வருண் சக்கரவர்த்தி கையாளும் விதத்தை பார்த்த பின் ஒன்றை உறுதியாகத் தெரிந்து கொண்டேன்”
“அதாவது இந்தியாவை தாண்டி வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு எதிரணிகள் அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தாண்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக இத்தொடரில் ஆஸ்திரேலியா பயன்படுத்திய திட்டத்தை நாம் பார்த்தோம். அந்தத் திட்டத்தை மற்ற எதிரணிகளும் உள்வாங்க முயற்சிப்பார்கள்”
இதையும் படிங்க: விராட் கோலி அதுல ஆல் டைம் கிரேட் பிளேயர்.. ரோஹித்தை பாக்க சான்ஸ் கிடைச்சா விடாதீங்க.. ஸ்டீவ் வாக்
“அதே போல உலகக் கோப்பையை வெல்ல விரும்பும் எந்த அணியும் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக தயாராகி வருவார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.