
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பஸ்பாஸ் ஸ்டைலில் சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை அடித்து நொறுக்கி 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் சதத்தை அடித்து 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அசத்தினார்கள். சுமாராக பவுலிங் செய்த இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
முன்னதாக இப்போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடியிருந்தால் இந்தியா 600+ ரன்களை வாரி வழங்கியிருக்காது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த வாஷிங்டன் சுந்தரை இந்தப் போட்டியில் 68 ஓவர்கள் வரை கேப்டன் கில் பவுலிங் செய்ய அழைக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். அதனால் நல்ல வேளையாக குல்தீப் விளையாடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் குல்தீப் விளையாடியிருந்தால் 2வது புதிய பந்தை எடுக்கும் வரை கேப்டன் கில் அவரையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சாடியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ஒரு வழியில் குல்தீப் யாதவ் விளையாடாததற்காக நான் கொஞ்சம் மகிழ்ச்சியடைகிறேன். அது நல்லது. ஏனெனில் 2 ஸ்பின்னர்கள் உட்பட 5 பவுலர்கள் விளையாடுகிறார்கள்”
“வாஷிங்டன் சுந்தர் 68வது ஓவரில் பவுலிங் செய்வதற்காக கொண்டு வரப்பட்டார். எனவே குல்தீப் விளையாடியிருந்தால் 2வது புதிய பந்து வந்த பின்பு தான் பவுலிங் செய்திருப்பார். அதாவது அவர் ஆரம்பத்திலேயே தன்னுடைய கையில் பந்தை பார்த்திருக்க மாட்டார். இந்த அனைத்து விஷயங்களும் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் பழைய பந்தில் 2 விக்கெட்டுகள் எடுத்தார்”
இதையும் படிங்க: உலகளவில் 3 ஆவது வீரராக பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய சரித்திர சாதனை – விவரம் இதோ
“அதனால் இந்த பிட்ச்சில் புதிய பந்து வந்த பின்பும் அவரே முதலாவதாக பவுலிங் செய்வதற்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஏனெனில் அதிகமாக சுழற்றப்பட்ட பந்து திரும்பியது. குறிப்பாக ஜோ ரூட்டுக்கு எதிராக ஜடேஜா வீசிய பந்தை சொல்லலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.