
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. ஜனவரி 11ஆம் தேதி வதோதரா மைதானத்தில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறையில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அதைப் பார்த்த சில இந்திய ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை மீண்டும் கழற்றி விட்டுள்ளீர்களா? என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீரை விமர்சிக்கிறார்கள். ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதே போல ஒருநாள் போட்டிகளிலும் அர்ஷ்தீப் சிங் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது அர்ஷ்தீப் சிங்கின் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பளிக்காத கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக அசத்தாத ராணா அவ்வப்போது சில போட்டிகளில் அசத்தியுள்ளார்.
மறுபுறம் கடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் பிரசித் கிருஷ்ணா மிகவும் மோசமாக பந்து வீசி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் அவருக்கு மீண்டும் வாய்ப்பை கொடுத்துள்ள இந்திய அணி அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். அதனால் ரசிகர்களுடன் சேர்ந்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில். “அர்ஷ்தீப் சிங் எங்கே? அவ்வளவு தான்” என்று விமர்சனக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
அதற்கு ஒரு ரசிகர் அர்ஷ்தீப் சிங் 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இருக்கிறார் என்று அஸ்வினுக்கு பதிலளித்தார். அந்த ரசிகருக்கு. “ஒரு வீரருக்கு அணியில் தேர்ந்தெடுத்த பின் ஓய்வு கொடுக்கக்கூடாது. ஒரு வீரருக்கு ஓய்வு என்றால் அது ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு கொடுக்கப்படுவது போல இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காவிட்டால் அது அவருடைய ஃபார்ம் மற்றும் செயல்திறனை பாதிக்கும்” என்று அஸ்வின் பதில் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 2 ஃபார்மட்டில் போனது நல்லதா போச்சு.. விராட், ரோஹித்தால் இதுக்கு புத்துயிர் கிடைச்சுருக்கு.. ப்ரியங் பஞ்சல்
மொத்தத்தில் இந்திய அணியில் தம்மை மேட்ச் வின்னராக நிரூபித்தும் அர்ஷ்தீப் சிங்கிற்கு நிலையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்பு சொல்லாத அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வருகிறார். அதனால் அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பலாம்.