100வது டெஸ்டில் 9 விக்கெட்ஸ்.. வார்னே, முரளிதரன் சாதனை சமன்.. கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை உடைத்த அஸ்வின்

Ashwin Kumble and Muralitharan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அந்த வகையில் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது. மேலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு சுலபமாக சாய்க்க முடியாது என்பதை உலக அணிகளுக்கு காண்பித்தது.

- Advertisement -

அஸ்வின் சாதனை:
முன்னதாக தர்மசாலாவில் நடைபெற்ற அந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த சாதனை போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே உலக சாதனையை சமன் செய்துள்ளார். இவர்களை தவிர்த்து சமீபத்தில் 100வது போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் உட்பட உலகின் மற்ற பவுலர்கள் 100வது போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 5 எடுத்ததில்லை.

- Advertisement -

மேலும் இப்போட்டியையும் சேர்த்து இதுவரை விளையாடிய 100 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 36வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 36* (100 போட்டிகள்)
2. அனில் கும்ப்ளே : 35 (132 போட்டிகள்)
3. ஹர்பஜன் சிங் : 25 (103 போட்டிகள்)

இதையும் படிங்க: இந்தியா கிட்ட நாங்க இப்படி தோத்தது தப்பேயில்ல.. 4-1 என்ற கணக்கில் தோற்ற பிறகு – பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டி இதோ

அத்துடன் இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனையையும் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன்/ரவிச்சந்திரன் அஸ்வின் : தலா 9
2. ஷேன் வார்னே : 8
3. கபில் தேவ்/அனில் கும்ப்ளே : 7

Advertisement