ரூட்டை காலி செய்த அஸ்வின்.. கும்ப்ளேவை முந்தி இந்திய மண்ணின் மைந்தனாக மாபெரும் வரலாற்று சாதனை

Ashwin vs Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 122*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 73 ரன்கள் எடுத்தும் 177/7 என தடுமாறிய இந்தியா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது

- Advertisement -

அஸ்வினின் மற்றொரு சாதனை:
அப்போது எட்டாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவுக்கு காப்பாற்றிய துருவ் ஜுரேல் 90 ரன்களும் குல்தீப் யாதவ் 28 ரன்களும் எடுத்தனர். அதனால் ஓரளவு தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 15 ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்து வந்த ஓலி போப்பை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத அஸ்வின் கடந்த இன்னிங்க்ஸில் சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த ஜோ ரூட்டையும் 11 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த போது க்ளீன் போல்டாக்கிய குல்தீப் யாதவ் கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் 4 ரன்களில் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அதனால் 3வது நாள் தேநீர் இடைவெளியில் 120/5 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் பேர்ஸ்டோ 30* ரன்களுடன் உள்ளார். அந்த அணியை விரைவில் ஆல் அவுட் செய்யும் வேகத்துடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் இதுவரை மொத்தம் எடுத்துள்ள 4 விக்கெட்களையும் சேர்த்து இந்திய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 352* விக்கெட்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஷஸ் தொடரையே மிஞ்சிய இந்தியா இங்கிலாந்து தொடர்.. நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனை – விவரம் இதோ

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை உடைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய மண்ணில் அதிகபட்சமாக அனில் கும்ப்ளே 350 டெஸ்ட் விக்கெட்களை எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் முன்னிலை வகிக்கும் இந்த பட்டியலில் இடத்தில் அனில் கும்ப்ளே 350, ஹர்பஜன் சிங் 265, கபில் தேவ் 219, ரவீந்திர ஜடேஜா 210* விக்கெட்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement