
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டியில் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் தொடருக்கு முன்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றனர். எனவே இம்முறை இளம் இந்திய அணி இங்கிலாந்தில் எப்படி செயல்படப் போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இது போக கேப்டன் சுப்மன் கில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் அவர் இதுவரை தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் முதலில் பிளேயிங் லெவலில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
அப்படிப்பட்டவரை கேப்டனாக நியமித்தது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்மன் கில் இடத்தில் தாம் கேப்டனாக இருந்தால் பேட்டிங்கில் கவனம் செலுத்தி பெரிய ரன்கள் குவிப்பேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதைச் செய்தாலே கேப்டனாக அணியை தன்னம்பிக்கையுடன் வழி நடத்த முடியும் என்றும் அஸ்வின் ஆலோசனைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் காரணமாக ஏற்கனவே சுப்மன் கில் அதிகமான பொறுப்பைப் பெற்றிருப்பார். ஒருவேளை அந்த மிகவும் அழுத்தமான வேலையில் அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால் முதலில் ஒரு பேட்ஸ்மேனாக தொடரை நன்றாக துவங்க விரும்புவேன். இங்கிலாந்து பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான இடமாகும்”
“ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய கேள்விகளை அவர் தன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் நல்ல ரன்களை குவித்தால் அது தன்னம்பிக்கையைக் கொடுத்து கேப்டன்ஷிப் வேலையை சிறப்பாக மாற்றும். தன் மீது எந்த கேள்விகளும் வராமல் இருப்பதற்காக அவர் ஆரம்பத்திலேயே அசத்துவார் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: நேரலையில் ஆனந்தத்தில் அழுத டேல் ஸ்டைன்.. தெ.ஆ வெற்றி குறித்து தனது தொப்பியை காண்பித்து நெகிழ்ச்சி
“டெஸ்ட் போட்டிகள் என்பது விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்தில் வளர்வதைப் பற்றியதாகும். கடந்த இங்கிலாந்து தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் 2வது இன்னிங்ஸில் அரை சதத்தை அடித்தார். அது அவருடைய அணுகுமுறை மற்றும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாறும் தன்மை ஆகியவற்றைப் பேசுகிறது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்ககிறது.