
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரரான ரோகித் சர்மா கடைசியாக ஆர்.சி.பி அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியின் போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அதனை தொடர்ந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவிண்டன் டி காக்கிற்கு முதல் முறையாக இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வாய்ப்பினை பயன்படுத்தி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்த சீசனில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 60 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 112 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அசத்தலான சதம் ஒன்றினை விளாசியிருந்தார். அதோடு இந்த சதத்தின் மூலம் சில முக்கிய சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தார்.
குறிப்பாக நேற்று அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையும் குவிண்டன் டி காக் நிகழ்த்தியிருந்தார். மேலும் இந்த போட்டியில் அவர் அடித்த 112 ரன்களால் மும்பை இந்தியன்ஸ் அணி 195 ரன்கள் வரை குவித்தது. ஆனாலும் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி அதனை 16.3 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் துரத்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக குவிண்டன் டி காக் 112 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்ததன் மூலம் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சனத் ஜெயசூர்யாவின் சாதனை ஒன்றினை மிக அருகில் தவறவிட்டார். அந்தவகையில் அவர் தவறவிட்ட சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கா இப்படி ஒரு நிலைமை.. 5 போட்டிகளில் விளையாடி சந்தித்த சோகம் – விவரம் இதோ
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரராக சனத் ஜெயசூர்யா 114* ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க தவறிய டி காக் நேற்று அடித்த 112* ரன்கள் மூலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.