ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மும்பை அணி கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய வேளையில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான கம்பெக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜஸ்ப்ரீத் பும்ரா சந்தித்துள்ள மோசமான நிலை :
மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெற்றதற்கு அடுத்து டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப் என தொடர்ச்சியான நான்கு தோல்விகளை பெற்று பெரிய சறுக்களை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக படுமோசமான தோல்வி சந்தித்தது.
மும்பை அணி பெற்ற இந்த தோல்வி பெரிய விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய சறுக்கலுக்கு காரணமே அந்த அணியின் மோசமான பந்துவீச்சு தான் என்று பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் 5 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மிக மோசமான நிலையை சந்தித்துள்ளார்.
இந்த தொடரில் இதுவரை அவர் விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் மொத்தமாக 19 ஓவர்களை வீசியுள்ள அவர் 114 பந்துகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மோசமான நிலையை சந்தித்துள்ளார். அதேபோன்று மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு 9 ஓவர்கள் வீசி இதுவரை விக்கெட் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி – தரமான ரெக்கார்டு
மும்பை அணியை பொறுத்தவரை அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படும் பும்ரா இதுவரை விக்கெட் எடுக்காமல் இருந்து வருவது அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அதேபோன்று ஒருபுறம் பும்ரா அழுத்தத்தை கொடுத்தாலும் மற்ற பந்துவீச்சாளர்களாலும் விக்கெட்டை எடுக்க முடியாததாலே மும்பை அணி இந்த சரிவை சந்தித்துள்ளதாகவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.



