போற போக்கை பாத்தா சச்சின் ரெகார்ட் உடைஞ்சுருமோ.. ரோஹித்தை மிஞ்சிய டீ காக்.. புதிய உலக சாதனையால் ரசிகர்கள் கவலை

De Kock 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 1ஆம் தேதி புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அதிரடியாக விளையாடி டீ காக் 114, வேன் டெர் டுஷன் 133 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 35.3 ஓவரிலேயே 167 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் செமி ஃபைனல் செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

சச்சின் சாதனை உடைப்பாரா:
முன்னதாக இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து 33 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள குவிண்டன் டீ காக் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 545 ரன்களை அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார்.

மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த விக்கெட் கீப்பர், அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த விக்கெட் கீப்பர் போன்ற ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை ஏற்கனவே அசால்டாக உடைத்துள்ள அவர் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற குமார் சங்ககாராவின் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவை அனைத்தையும் விட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் முதல் 7 போட்டிகளில் அதிக ரன்கள் (545) அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் அவர் உடைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2019 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தன்னுடைய முதல் 7 போட்டிகளின் முடிவில் 544 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். இந்த சூழ்நிலையில் லீப் சுற்றில் இன்னும் 2 போட்டிகளில் விளையாடப் போகும் தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றில் குறைந்தது ஒரு போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. எனவே அந்த 3 போட்டிகளில் இன்னும் 129 ரன்களை அடிக்கும் பட்சத்தில் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை தகர்த்து டீ காக் புதிய உலக சாதனை படைப்பார்.

இதையும் படிங்க: அவங்கள லேசா விட்டது தப்பு தான்.. ஓவர்நைட்ல நாங்க மோசமாகிடல.. தோல்விக்கு பின் டாம் லாதம் வருத்தம்

இதற்கு முன் 2003 உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் விளாசி படைத்திற்கும் அந்த சாதனையை 2019இல் ரோகித் சர்மா நெருங்கியும் தொட முடியவில்லை. ஆனால் தற்போது அட்டகாசமான ஃபார்மில் இருப்பதன் காரணமாக டீ காக் அதை உடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. இது போன்ற சாதனைகள் உடைக்கப்படுவதற்காகவே படைக்கப்படுகிறது என்றாலும் சச்சினின் சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் நன்றாக இருக்கும் என்பதே இந்திய ரசிகர்களின் கவலையாக இருக்கிறது.

Advertisement