இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்தது. அதில் சச்சின் தலைமையில் இந்தியா, பிரைன் லாரா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், ஜாக் காலிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. கூடவே குமார் சங்ககாரா தலைமையில் இலங்கை, ஷேன் வாட்சன் தலைமையில் ஆஸ்திரேலியா, இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளும் விளையாடின.
அதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அசத்திய இந்தியா மாஸ்டர்ஸ் அணி லீக் சுற்றில் தென்னாபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தோற்கடித்தது. அதே போல லீக் சுற்றில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலில் இந்தியா தோற்கடித்தது. இறுதியில் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியா சாம்பியன்:
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் லெண்டில் சிமென்ஸ் 57, ட்வயன் ஸ்மித் 45 ரன்கள் எடுத்த உதவியுடன் 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியா அணியை அம்பத்தி ராயுடு 74, சச்சின் 25 ரன்கள் எடுத்து 17.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராயுடு ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது. ஃபைனல் வரை வந்து தோல்வியை சந்தித்த லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ராயுடு ரூபாய் 50000 பரிசுத்தொகை பெற்றார்.
பரிசுத்தொகை விவரங்கள்:
ஃபைனலில் அதிக (9) பௌண்டரிகள் அடித்த ராயுடு ரூபாய் ஐம்பதாயிரம் ஸ்பெஷல் பரிசையும் பெற்றார். அதிக சிக்ஸர்கள் (3) அடித்ததற்காகவும் ராயுடு ரூபாய் 50000 ஸ்பெஷல் பரிசை வென்றார். இந்தத் தொடரில் அதிக பௌண்டரிகள் (38) அடித்ததற்காக இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா ரூபாய் ஐம்பதாயிரம் பரிசு பெற்றார். அதிக சிக்ஸர்கள் (25) அடித்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வாட்சன் ரூபாய் 50000 பரிசை வென்றார்.
இதையும் படிங்க: 2 ஐசிசி கோப்பை சரி.. டெஸ்டில் ரோஹித் சரியில்லை.. அந்த தொடரில் இந்தியாவை ஜெய்க்க வைக்கனும்.. கங்குலி
மேலும் இறுதிப் போட்டியில் கேம் சேஞ்சர் விருதை இந்திய வீரர் சபாஷ் நதீம் 2 விக்கெட்டுகளை எடுத்து வென்றார். அத்துடன் குறைந்த எகனாமியில் (3.00) பவுலிங் செய்த வீரர் என்ற விருதையும் அவர் வென்றார். அந்த 2 விருதுக்காக அவர் தல ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது.