ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதற்கு முன் முன்பாகவே 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதன் வாயிலாக தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அசத்துவதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப், பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் ரோகித் தலைமையில் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.
கங்குலி அதிருப்தி:
நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட் வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்தது. எனவே ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக ரோஹித் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “4 – 5 வருடங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சுமாரான ஃபார்ம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”
“ரோகித் போன்ற நட்சத்திர அந்தஸ்தும் திறமையும் கொண்ட வீரர் தற்போது விளையாடுவதை விட இன்னும் சிறப்பாக விளையாட முடியும். இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரை பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த தொடரைப் போலவே கடினமாக இருக்கும். அங்கேயும் ஸ்விங், வேகம் ஆகியவை இருக்கும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சிறந்தவர்”
சவாலான டெஸ்ட்:
“ஆனால் அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியா அசத்த வேண்டும். ரோஹித் சர்மா எப்போதும் சிறந்த கேப்டன். இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட என்னால் அவரிடம் தலைமைப் பண்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியை சிறந்த உச்சங்களுக்கு அழைத்துச் சென்றதில் எனக்கு ஆச்சரியமில்லை”
இதையும் படிங்க: 100-ஆவது டெஸ்ட் போட்டியோடு ரிட்டயர்டு ஆகலாம்னு தோனியை கூப்பிட்டேன்.. யாரும் அறியா நிகழ்வை – பகிர்ந்த அஷ்வின்
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னுடைய இந்தப் பேட்டியை ரோகித் பார்த்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுப்பாக விளையாடி விஷயங்களை மாற்ற வேண்டும். தற்சமயத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்படவில்லை. எனவே இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வழியை கண்டறியுங்கள். ரோஹித் சர்மா இந்த இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றி பெற வைக்கும் வழியைக் கண்டறிய வேண்டும்” எனக் கூறினார்.



