குட்டி சேவாக்கை போல பவுலர்களை புரட்டி எடுக்கும் இளம் இந்திய வீரர் – சேவாக்க்கு பின் புதிய மைல்கல்

Prithivi Shaw
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்து முன்னோக்கி நடந்து வருகிறது. இந்த வருடம் மும்பைக்கு எதிராக தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணி அதன்பின் அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்தது. அந்த நிலைமையில் நேற்று வலுவான கொல்கத்தாவை தனது 4-வது போட்டியில் சந்தித்த அந்த அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

KKR vs DC

- Advertisement -

ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 215/5 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 61 (45) ரன்களை விளாசினார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அசத்தும் டெல்லி:
அதை தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் அஜிங்கிய ரஹானே 8 (14) வெங்கடேஷ் ஐயர் 18 (8) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதனால் 38/2 என தடுமாறிய தனது அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 33 பந்துகளில் அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்து காப்பாற்ற போராடிய போதிலும் ஆட்டமிழந்தார். அவருடன் நித்தீஷ் ராணா 30 (20) சாம் பில்லிங்ஸ் 15 (9) போன்ற முக்கிய வீரர்கள் மிடில் ஆர்டரில் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

Shreyas Iyer vs Dc

அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசலும் 24 (21) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த வீரர்களை டெல்லி பவுலர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்ததால் 19.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

பிரித்து மேயும் பிரிதிவி ஷா:
முன்னதாக இந்த போட்டியில் டெல்லி வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அமைத்த 93 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் தான் ஆரம்பத்திலேயே அடித்தளமிட்டது. அதிலும் 45 பந்துகளில் 61 ரன்களை 135.56 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்த டேவிட் வார்னரை விட பவர்ப்ளே ஓவர்களில் பட்டாசாக விளையாடிய இளம் இந்திய வீரர் பிரிதிவி ஷா வெறும் 29 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 51 ரன்களை 175.86 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசினார்.

David Warner Prithivi Shaw

இந்த போட்டியில் கூட பரவாயில்லை இதற்கு முந்தைய போட்டியான லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் இதேபோல பவர் பிளே ஓவர்களில் சரவெடியாக வெடித்து 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 61 ரன்கள் விளாசிய போதிலும் அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் டெல்லி தோல்வி அடைந்தது.

- Advertisement -

அதிலும் அந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு டெல்லி பதிவு செய்த 67 ரன்களில் பிரிதிவி ஷா மட்டும் தனி ஒருவனாக 61 ரன்கள் விளாச அவரை எதிர்ப்புறம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த டேவிட் வார்னர் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த அளவுக்கு பவர்பிளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்தும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்த வருகிறார் என்றே கூறலாம்.

Prithivi Shaw Sehwag

குட்டி சேவாக்:
அவரின் இந்த அதிரடி சரவெடியான ஆட்டத்தைப் பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஏனெனில் அவர்தான் போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்கவிட்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதிரணிகளை புரட்டியெடுக்கும் ஒரு வீரராக வலம் வந்தார். தற்போது அவரைப்போலவே அவரின் வழியில் விளையாடும் பிரிதிவி ஷா “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணிக்காக பவர்பிளே ஓவர்களில் 1000 ரன்களை குவித்த 2-வது பேட்ஸ்மேன்” என்ற மைல்கல்லை ஜாம்பவான் சேவாக்க்கு பின் பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை ஒரு கேப்டனாக இந்தியாவிற்கு வென்று கொடுத்த பிரிதிவி ஷா அதன் காரணமாக இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் விளையாடும் வாய்ப்பை பெற்று அதிரடியாக விளையாடினார். குறிப்பாக இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அவரை விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகிய 3 ஜாம்பவான்கள் கலந்த கலவைதான் பிரிதிவி ஷா என்று அப்போதைய பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஜாம்பவான் ரவி சாஸ்திரி வியந்து போய் பாராட்டினார்.

இதையும் படிங்க : சென்னை அணியின் பிரச்சனை தீரனும்னா தோனியை அந்த இடத்தில் களமிறக்குங்க – பார்திவ் படேல் யோசனை

அந்த அளவுக்கு திறமை வாய்ந்த அவர் அதன்பின் பார்மை இழந்த காரணத்தால் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் இப்போது போலவே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் விரைவில் இந்திய அணியில் விளையாடுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதால் அதில் வெற்றியும் காண்பார் என நம்பலாம்.

Advertisement