ஸ்ரேயாஸ், ராகுல் இருக்கட்டும், ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க நாம ஏன் அவர ட்ரை பண்ணக்கூடாது – இளம் வீரருக்கு பிரக்யான் ஓஜா ஆதரவு

Pragyan Ojha
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்க உள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற சில முதன்மை வீரர்கள் காயத்தை சந்தித்து இதுவரை முழுமையாக குணமடைந்து களமிறங்காமல் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

அதை விட 2019 உலகக்கோப்பையில் அம்பத்தி ராயுடுவை கழற்றி விட்டு 4வது இடத்தில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட விஜய் சங்கர் சுமாராக செயல்பட்டு ஏமாற்றத்தை கொடுத்து காயமடைந்து வெளியேறினார். அவரது இடத்தில் கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோரை களமிறக்கி சோதித்துப் பார்த்தும் ஏமாற்றத்தையே சந்தித்த இந்தியாவுக்கு 4 வருடங்கள் கடந்தும் இன்னும் நம்பர் 4வது இடத்தில் விளையாடும் நிலையான 2 பேட்ஸ்மேன்கள் கிடைக்கவில்லை என்பது சோகமான தொடர்கதையாக தொடர்கிறது.

- Advertisement -

ஓஜாவின் யோசனை:
குறிப்பாக அந்த சோதனையில் கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தாலும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஆனால் அவரை தவிர்த்து 4வது இடத்தில் விளையாடப் போகும் சரியான பேக் அப் வீரர் யார் என்ற கேள்விக்குறி இப்போதும் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அழுத்தமான போட்டிகளில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் பாண்டிய வரை டாப் 6 பேருமே வலது கை வீரர்களாக இருப்பதும் இந்தியாவுக்கு மற்றுமொரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அப்படி கடந்த 4 வருடங்களாக தீராத 4வது பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்க்க ஏன் திலக் வர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது கடந்த சில ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சவாலான பிட்ச்சில் சுப்மன் கில், சஞ்சு சம்சான் போன்ற இதர வீரர்கள் தடுமாறிய போதும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து போராடி வரும் திலக் வர்மா 20 வயதிலேயே மிகவும் முதிர்ச்சியுடையவராக விளையாடி வருகிறார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுப்பது ஒரே கல்லில் 2 மாங்காய் போல 4வது பேட்ஸ்மேன் பிரச்சினையை தீர்ப்பதுடன் மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையையும் சரி செய்யும் என்று தெரிவிக்கும் பிரக்யான் ஓஜா இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு.

“ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் நிலவும் நம்பர் 4 பிரச்சினையும் விவாதத்தையும் தீர்க்க உதவும் வகையில் திலக் வர்மாவின் சேர்க்கையை விரைவுப்படுத்த வாய்ப்புள்ளதா? அந்த இடத்திற்கு அவர் மிகவும் அமைதியுடன் வலுவாக செயல்படக்கூடிய நம்பிக்கைக்குரியவராக தோன்றுகிறார். மேலும் இடது கை பேட்ஸ்மனாக இருப்பதால் மற்றுமொரு நன்மையை சேர்க்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கஷ்டப்பட்டு உழைச்சது அவரு, பேரு வாங்கிட்டு போறது நீங்களா? நட்சத்திர இந்திய வீரரை மறைமுகமாக தாக்கிய இர்பான் பதான்

முன்னதாக 2023 உலக கோப்பை அணியில் குறைந்தபட்சம் திலக் வர்மாவை பேக் அப் வீரராக தேர்வு செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தார். அந்தளவுக்கு அறிமுக தொடரிலேயே சவாலான மைதானங்களில் திடமாக நின்று தில்லாக அடிக்கும் திலக் வர்மா நிச்சயமாக ஒருநாள் போட்டிகளிலும் அசத்துவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே நிறைய முன்னாள் வீரர்களின் கோரிக்கை குவிந்து வருவதால் விரைவில் அவர் ஒருநாள் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement