DC vs PBKS : முதல் 10 ஓவரில் அம்பியாக அடுத்த 10 ஓவரில் அந்நியனாக மாறி தனி ஒருவனாக – பஞ்சாப்பை காப்பாற்றிய இளம் வீரர்

Prabhsimran Singh
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 59வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோன நிலையில் பஞ்சாப் இந்த போட்டியில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 7 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்து வந்த லியாம் லிவிங்க்ஸ்டன் தடுமாறி 4 (5) ரன்களில் இசாந்த் சர்மா வேகத்தில் கிளீன் போல்ட்டான நிலையில் அவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு அதிரடி வீரர் ஜிதேஷ் சர்மா பொறுப்பின்றி அக்சர் படேல் சுழலில் 5 (5) ரன்களில் கிளீன் போல்ட்டாகி சென்றார். அதனால் 45/3 என ஆரம்பத்திலேயே பஞ்சாப் சரிந்த காரணத்தால் மறுபுறம் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அடுத்து களமிறங்கிய சாம் கரணுடன் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்ய போராடினார். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி அவர் முதல் 10 ஓவர்களின் முடிவில் 31 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாற்றமாகவே செயல்பட்டார்.

- Advertisement -

தனி ஒருவனாக போராட்டம்:
ஆனால் பொதுவாகவே திறமை வாய்ந்த வீரர்கள் நன்றாக செட்டிலாகி மைதானம் மற்றும் எதிரணி பவுலர்களின் தன்மையை அறிந்து நேரம் செல்ல செல்ல அதிரடியாக என்று சொல்வார்கள். அதற்கு மிகச் சிறந்த அடையாளமாகவும் எடுத்துக்காட்டாகவும் இந்த போட்டியில் செயல்பட்ட அவர் 10 ஓவர்களுக்கு பின் படிப்படியாக அதிரடியை தொடங்கி அரை சதமடித்து நேரம் செல்ல செல்ல விரைவாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் செயல்பட்ட அவருடன் 4வது விக்கெட்டுக்கு முக்கியமான 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்ய உதவினாலும் மெதுவாகவே விளையாடிய சாம் கரன் 20 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹார்ப்ரீத் ப்ரார் 2 (5) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் டெத் ஓவர்களில் அதிரடியை அதிகப்படுத்தி கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து அனைவரையும் கைதட்டி பாராட்ட வைத்தார். அந்த வகையில் அபாரமாக செயல்பட்ட அவர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் 103 (65) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் தமிழக வீரர் சாருக்கான் 2 (4) ரன்களில் ரன் அவுட்டானதால் ஓரளவு மட்டுமே தப்பிய பஞ்சாப் 20 ஓவர்களில் வெற்றிக்கு போராடும் அளவுக்கு 167/7 ரன்கள் குவித்து அசத்தியது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை விட இந்த போட்டியில் முதல் 31 பந்துகளில் அம்பியாக 27 ரன்கள் மட்டுமே எடுத்த பிரப்சிம்ரன் சிங் அடுத்த 31 பந்துகளில் அந்நியனாக மாறி 73 ரன்களை விளாசி சதமடித்தது அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: வீடியோ : ஒரே ஓவரில் 31 ரன்கள், மாஸ் சிக்ஸர்களால் ஹைதராபாத் கனவை அடித்து நொறுக்கிய ஸ்டோனிஸ் – பூரான்

குறிப்பாக இதர வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 51 (55) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெறும் 22 வயது மட்டுமே நிரம்பிய அவர் மட்டும் தனி ஒருவனாக 103 (65) ரன்கள் எடுத்து 167/7 ரன்களை எடுத்த (15 எக்ஸ்ட்ராஸ்) பஞ்சாப்பை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அசத்தலாக செயல்பட்ட அவருடைய ஆட்டத்தால் தப்பிய பஞ்சாப் பந்து வீச்சில் வெற்றி பெற போராடி வருகிறது.

Advertisement