கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் ரெஸ்ட் தேவை – விராட் கோலிக்கு ஆதரவளிக்கும் அவரின் பாட்னர்

Kohli Press
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்க வில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் 23000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ஏற்கனவே தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

Virat-Kohli

- Advertisement -

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்சிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திரமாக விளையாடத் தொடங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 30 ரன்களை கூட தாண்டாதது என எதிர்பார்க்கப் படுவதை விட அவர் சுமாராக செயல்படுகிறார். அதனால் எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் பெரிய பெயரை வைத்துக்கொண்டு இந்திய அணியில் விளையாட முடியும் என்று கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளார்கள்.

ஓய்வு சர்ச்சை:
இருப்பினும் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படும் நிறைய வீரர்கள் விராட் கோலி அடித்துள்ள 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான், சோயப் அக்தர் உட்பட நிறைய வெளிநாட்டவர்கள் அவருக்கு விமர்சனத்தை மிஞ்சிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதுபோக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு உடலிலும் ஆட்டத்திலும் தெரிந்ததால் ஐபிஎல் 2022 தொடரின் பாதியிலேயே வெளியேறி சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் அவருக்கு ஆலோசனை கொடுத்தனர்.

Virat Kohli vs CSK

அதற்கு தொடர்ச்சியாக விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த விராட் கோலி சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்குப் பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் பங்கேற்று விட்டு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் ஓய்வெடுக்கிறார்.

- Advertisement -

ஆனால் இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி ஓய்வெடுப்பாரா என்று அதற்காக தனியாக ஒரு விமர்சனத்தை சந்தித்தார். இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் பணிச்சுமையால் திடீரென்று ஒரு வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை பார்த்தால் அவர் ஓய்வெடுப்பதும் சரியான முடிவாகவே தெரிகிறது. அந்த வகையில் தற்போது ஓய்வெடுத்து வரும் அவர் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27இல் துபாயில் துவங்கும் ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவானின் ஆதரவு:
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் மற்றொரு சீனியர் இந்திய வீரர் ஷிகர் தவான் தொடர்ச்சியாக விளையாடும்போது மனதளவில் ஏற்படும் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்கு ஓய்வு அவசியம் என்று கூறியுள்ளார். விரைவில் நடைபெறும் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட இருக்கும் அவரது தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி விளையாடவில்லை என்ற நிலைமையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு கிரிக்கெட் வீரர் உச்சகட்ட செயல்பாடுகளை கொடுப்பதற்கு புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியமாகும். ஒரு வீரர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடும் போது நிச்சயமாக மனதளவில் களைப்படைந்து விடுவார். எனவே அந்த சமயத்தில் மனதளவில் ஓய்வெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். சொல்லப்போனால் அது போன்ற வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகவே உலக அளவில் அனைத்து அணிகளிலும் சுழற்சி முறையில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது”

dhawan 1

“ஒரு வீரர் உலகின் அனைத்து இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும்போது களைப்படைகிறார். ஏனெனில் கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே. எனவே உயர் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் (வாரியம்) அதைப் புரிந்துகொண்டு வீரர்கள் சமநிலையுடன் விளையாடுவதற்கு தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

- Advertisement -

விராட் கோலியுடன் கடந்த 10 வருடங்களில் நிறைய போட்டிகளில் பார்ட்னராக இணைந்து விளையாடிய ஷிகர் தவானின் மற்றொரு பார்ட்னர் கேப்டன் ரோகித் ஷர்மாவும் இதே பணிச்சுமை காரணமாக இந்த வருடம் நிறைய தொடர்களில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : IND vs WI : எதிரணி ஈசியா கண்டுபிடிக்கிறாங்க, அந்த யுக்தியை மாற்றுங்க – ரோஹித்துக்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்

எனவே இந்த நவீன கிரிக்கெட்டில் நெருக்கமான போட்டி அட்டவணைக்கு மத்தியில் வீரர்கள் சோர்வடைவது சகஜம் என்று தெரிவிக்கும் ஷிகர் தவான் அதற்காக ஓய்வெடுப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார். அப்போது தான் அவர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement