
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 190 ரன்களை குவிக்கவே பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 184 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இப்படி 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் போது ஆர்.சி.பி அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் துவக்க வீரர் பிலிப் சால்ட் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இந்த தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய விதம் குறித்தும் தங்களது அணியின் ரசிகர்கள் குறித்தும் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகச்சிறப்பான ஒன்று. இப்போது நாங்கள் அளவில்லா சந்தோஷத்தில் இருக்கிறோம். நான் ஏற்கனவே இங்கிலாந்து சென்று திரும்பியதால் சரியாக தூங்கவில்லை. என்னுடைய குழந்தை பூமிக்கு வந்த நேரம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக உள்ளது. இன்று நான் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன். உண்மையிலேயே இந்த உணர்வு மிகச் சிறப்பான ஒன்று.
ஆர்சிபி அணி இந்த வருடம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இப்படி நாங்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த எங்களது அணியின் ரசிகர்கள் மிக முக்கிய காரணம். ஏனெனில் நாங்கள் இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் எங்களுக்கு ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் நேரில் வந்து முழு ஆதரவை தெரிவித்தனர். இப்படி ஒரு ரசிகர் கூட்டம் ஒரு அணிக்காக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவு கொடுப்பது என்பது நம்ப முடியாத ஒன்று.
இதையும் படிங்க : அந்த மனுஷனோட பீலிங் என்னனு என்னால புரிஞ்சிக்க முடியுது.. இது விராட் கோலிக்கு மட்டும் தான் – ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி
ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் என்னை வியக்க வைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் ஆதரவிற்கும், அன்பிற்கும் நாங்கள் அனைவருமே நன்றி கடமை பட்டுள்ளோம். நாங்கள் நினைத்ததை விட ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் பெரிய ஆதரவை இத்தொடர் முழுவதுமே அளித்துள்ளார்கள் என பிலிப் சால்ட் பேசியது குறிப்பிடத்தக்கது.