ஒழுங்கா எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுங்க இல்லைனா கூட்டத்தை கூட்டுவோம் – ஜெய் ஷா’வை எச்சரித்த பாக் வாரிய தலைவர்

Zaka Asraf
Advertisement

விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆசிய கவுன்சிலின் புதிய தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் இத்தொடரை முழுமையாக நடத்தும் உரிமையை உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானுக்கு சென்று இத்தொடரில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளராகவும் இருக்கும் ஜெய் ஷா அறிவித்தார்.

அதற்கு உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் வாரியம் பதிலடி கொடுத்தது. அப்போதிலிருந்து இந்த விவகாரத்தில் நிறைய காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இறுதியாக பாகிஸ்தான் பங்கேற்கும் முக்கியமான 4 போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு சம்மதம் வழங்கிய ஆசிய கவுன்சில் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்று அறிவித்தது.

- Advertisement -

நஷ்ட ஈடு கொடுங்க:
இருப்பினும் பாகிஸ்தானில் எவ்விதமான தடைகளும் இல்லாமல் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இலங்கையில் மழை காரணமாக பெரும்பாலான போட்டிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் விளையாட்டில் அரசியலை கலந்த ஜெய் ஷா மற்றும் இந்தியாவுக்கு மழை பதிலடி கொடுத்து வருவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டில் நடைபெற வேண்டிய இத்தொடரின் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான வருமானம் கிடைக்கவில்லை என பாகிஸ்தான் வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே அந்த இழப்பை ஈடு செய்வதற்கு ஆசிய கவுன்சில் மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா வழி வகை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவேளை நஷ்ட ஈடு கொடுக்க தவறினால் அதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்தியாவுக்கு எதிராக அடுத்த ஆசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று ஜாகா அஷ்ரப் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா’வுக்கு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

அது போக கொழும்பு நகரில் அதிக மழை பெய்து வருவதால் சூப்பர் 4 பெட்டிகளை ஹம்பன்தோட்டாவுக்கு மாற்றலாம் என்று தங்களிடம் தெரிவித்த ஜெய் ஷா கடைசி நேரத்தில் அந்த முடிவை மாற்றியதற்கும் ஜாகா அஸ்ரப் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது. இது பற்றி அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்தியா தவர வேற ஏதாவது டீமுக்கு இவர் ஆடுனா கண்டிப்பா எல்லா மேட்ச்லயும் பிளேயிங் லெவன்ல ஆடுவாரு – ஹர்பஜன் கருத்து

“கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற மீட்டிங்கில் கொழும்புவில் அதிக மழை பெய்வதால் அங்கு நடைபெற வேண்டிய போட்டிகளை ஹம்பன்தோட்டாவுக்கு மாற்றலாம் என அனைவரும் ஒப்புக்கொண்டோம். ஆனால் கடைசியில் எங்களிடம் கேட்காமலேயே அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இருப்பினும் வழக்கம் போல இந்தியாவுக்கு ஆதரவாக இதர ஆசிய உறுப்பு நாடுகள் இருக்கும் என்பதால் இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் எதுவும் செய்ய முடியாது என்றே எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement