வீடியோ : தரமான சுழலால் ஒரே ஓவரில் 2 தூண்களை சாய்த்த இளம் வீரர் – டெல்லியை வீட்டுக்கு அனுப்பிய பஞ்சாப், ப்ளே வாய்ப்பு உள்ளதா?

Harpreet Brar Rahul Chahar
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 59வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஷிகர் தவான் 7 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 4 (5) ஜிதேஷ் சர்மா 5 (5) என அதிரடி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் 45/3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியை மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் ப்ரப்சிம்ரன் சிங் அடுத்ததாக களமிறங்கிய சாம் கரணுடன் இணைந்து நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார். குறிப்பாக முதல் 10 ஓவரில் 31 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் அதன் பின் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மெதுவாகவே விளையாடிய ஷாம் கரண் 20 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனாலும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய ப்ரப்சிம்ரன் சிங் தனி ஒருவனாக டெல்லிக்கு சிம்ம சொப்பனமாக மாறி 10 பவுண்டரி 6 சிக்சருடன் தன்னுடைய முதல் சதமடித்து 103 (65) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஷாருக்கான் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் 20 ஓவர்களில் பஞ்சாப் 167/7 ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து 168 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சரவெடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

ஆனால் அவருடன் மறுபுறம் பெயருக்காக 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சற்று மெதுவாகவே விளையாடிய பில் சால்ட்டை 3 பவுண்டரியுடன் 21 (17) ரன்களில் ஹர்ப்ரீத் ப்ரார் சுழலில் கிளீன் போல்ட்டானார். அந்த நிலைமையில் வந்த மிட்சேல் மார்ஷ் 3 (4) ரன்களில் ராகுல் சஹர் சுழலில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிலீ ரோசவை 9வது ஓவரின் முதல் பந்தில் 5 (5) ரன்களில் அவுட்டாக்கிய ஹர்ப்ரீத் அதே ஓவரின் கடைசி பந்தில் மறுபுறம் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து டெல்லியை வெற்றி பாதைக்கு அழைத்து வர முயற்சித்த கேப்டன் டேவிட் வார்னரை 10 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (27) ரன்களில் காலி செய்து பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் 86/4 என சரிந்த டெல்லியை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேலும் ராகுல் சஹர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே 1 (2) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதற்கடுத்த ஓவரின் முதல் பந்தில் மனிஷ் பாண்டேவை மீண்டும் ஹர்ப்ரீத் ப்ரார் தனது மாயாஜால சூழலில் டக் அவுட்டாக்கினார். அதனால் 20 ஓவர்களில் 136/8 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்தி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 4 விக்கெட்டுகளையும் ராகுல் சஹர் மற்றும் நாதன் எலிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இப்போட்டியில் சுழலுக்கு சாதகமான டெல்லி மைதானத்தில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறிய நிலையில் தனி ஒருவனாக போராடி சதமடித்து செங்குத்தாக தூக்கி நிறுத்திய ப்ரப்சிம்ரன் சிங் வெற்றி பெறுவதற்கு தேவையான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார். அதை வீணடிக்காத வகையில் பந்து வீச்சில் குறிப்பாக 6.2 ஓவரில் 69 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை பெற்ற டெல்லியை மிடில் ஓவர்களில் ஹர்ப்ரீத் – ராகுல் சஹர் ஆகியோர் தங்களது மாயாஜால சுழலில் சுருட்டி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க:LSG vs SRH : ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ போட்ட ஒரு ஓவர் தான் நாங்க ஜெயிக்க காரணம் – க்ருனால் பாண்டியா பேட்டி

அதனால் 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 6வது இடத்துக்கு முன்னேறி 21% மட்டுமே பிளே ஆப் சுற்றும் வாய்ப்பை தக்க வைத்து எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் இந்த முக்கிய போட்டியில் டேவிட் வார்னரை தவிர்த்து ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 12 போட்டிகளில் 8வது தோல்வியை பதிவு செய்த டெல்லி ஐபிஎல் 2023 தொடரிலிருந்து முதல் அணியாக லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

Advertisement