ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி ஜெய்ப்பூரில் 59வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு துசார் தேஷ்பாண்டே ஆரம்பத்திலேயே ப்ரியான்ஸ் ஆர்யாவை 9 ரன்னில் அவுட்டாக்கி மறுபுறம் அடித்து நொறுக்கிய பிரப்சிம்ரன் சிங்கையும் 21 (10) ரன்னில் காலி செய்தார்.
அடுத்ததாக வந்த மிட்சேல் ஓவன் டக் அவுட்டானதால் 34/3 என ஆரம்பத்திலேயே பஞ்சாப் தடுமாறியது. அப்போது களமிறங்கிய நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக பேட்டிங் செய்து 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 (25) ரன்னில் அவுட்டானார்.
பஞ்சாப் அசத்தல்:
ஆனால் இந்தப் பக்கம் பட்டாசாக விளையாடிய நேஹல் 25 பந்தில் 50 ரன்கள் அடித்து மிரட்டலாக ரன்களை குவித்தார். அடுத்ததாக வந்த சசாங் சிங் தம்முடைய பங்கிற்கு வேகமாக ரன்களை சேர்த்தார். தொடர்ந்து அதே வேகத்தில் வெளுத்து வாங்கிய நேஹல் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70 (37) ரன்கள் குவித்து அவுட்டானார்.
மறுபுறம் டெத் ஓவர்களில் அபாரமாக விளையாடிய சசாங் அரை சதத்தை அடித்து 59* (30) ரன்கள் குவித்தார். இறுதியில் ஓமர்சாய் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் வெறும் 9 பந்தில் 21* ரன்கள் குவித்து அபார ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 219/5 ரன்களை அடித்த பஞ்சாப் ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது.
சாதனை ஸ்கோர்:
இதற்கு முன் இதே வருடம் ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை 217/2 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இதுபோக ஐபிஎல் தொடரில் 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்த பின் அதிக ரன்கள் (219) அடித்த அணி என்ற வரலாற்றையும் பஞ்சாப் நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக லக்னோ அணி 35க்குள் 3 விக்கெட்டுகள் இழந்தும் 213/9 ரன்களை அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: இந்த ஒரு விஷயம் போதாதா? சுப்மன் கில் சூப்பர் கேப்டனா இருப்பாரு – பாராட்டிய பார்த்திவ் படேல்
இவை அனைத்தையும் விட இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் 4, 5, 6, 7வது இடத்தில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் மொத்தம் 180 ரன்கள் குவித்தனர். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் மிடில் ஆர்டரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் பஞ்சாப் படைத்துள்ளது. இதற்கு முன் 2020 தொடரில் துபாயில் பெங்களூருவுக்கு எதிராக மும்பை 174 ரன்களை அடித்ததே முந்தைய சாதனை.



