ரொம்ப போராடியும் ஜெயிக்க முடியல.. சென்னை அணி பஞ்சாபிற்கு எதிராக தோல்வியை சந்திக்க என்ன காரணம் – விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங் அகர்வால் 18 (21) ரன்களில் அவுட்டானார். அதனால் 37/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய பனுக்கா ராஜபக்சா மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

Shikar Dhawan

- Advertisement -

6-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் மிடில் ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை பவுலர்களை பந்தாடினர். இந்த ஜோடியில் இருவருமே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு 2-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னைக்கு மிகப் பெரிய தொல்லையாக அமைந்து ஒருவழியாக 18- வது ஓவரில் பிரிந்தனர்.

அசத்திய தவான்:
அதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (32) ரன்கள் எடுத்திருந்த போது பனுக்கா ராஜபக்சா ஆட்டமிழக்க அடுத்து வந்த லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 19 (7) ரன்கள் எடுத்தார். மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்று அதிரடி காட்டிக்கொண்டிருந்த நட்சத்திர வீரர் ஷிகர் தவான் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 88* (59) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 187/4 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 188 என்ற வெற்றி இலக்கை துரத்திய சென்னைக்கு அனுபவ வீரர் ராபின் உத்தப்பா 1 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த மிட்செல் சாட்னரும் 9 (15) ரன்களில் அவுட்டாகி சென்னைக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அந்த நிலைமையில் களமிறங்கிய சிவம் துபேவும் 8 (7) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டியதால் 40/3 என ஆரம்பத்திலேயே சென்னை தடுமாறியது.

- Advertisement -

போராடிய ராயுடு:
அந்த நிலையில் 4 பவுண்டரி உட்பட 30 (27) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்த ருதுராஜ் கைக்வாட்’டும் ஆட்டமிழக்க 89/4 என சரிந்த சென்னை தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியாக பேட்டிங் செய்து சரிந்த சென்னையின் வெற்றிக்காக போராடினார். முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய அவர் 7 பவுண்டரி 6 சிக்சர்கள் உட்பட வெறும் 39 பந்துகளில் 78 ரன்களை நொறுக்கிய அவர் முக்கியமான கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய எம்எஸ் தோனியும் 1 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 12 (8) ரன்களில் ஆட்டம் இழந்ததால் சென்னையின் தோல்வி உறுதியானது. இறுதியில் ஜடேஜா 21* (16) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 176/6 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை போராடி தோற்றது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ரிஷி தவான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற பஞ்சாப் 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது.

என்ன காரணம்:
மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய நேரத்தில் சொதப்பிய சென்னை இந்த வருடம் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து மும்பையில் தொடர்ந்து 2-வது அணியாக வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இந்த போட்டியில் உத்தப்பா ஏமாற்றிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் 30 (27) ரன்கள் எடுத்து செட்டான போதிலும் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றியதால் சேசிங் ரன்ரேட் தொடர்ந்து 10 ரன்களுக்கு மேல் ஏறியது.

CSK

அப்போது நடுவரிசையில் களமிறங்கி வெறும் 39 பந்துகளில் 78 ரன்கள் குவித்த ராயுடு வெற்றிக்காக தனி ஒருவனை போல் முழு மூச்சுடன் போராடிய போதிலும் அவருக்கு கைகொடுக்க இதர வீரர்கள் வீரர்கள் தவறியதால் கடைசி வரை ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியாத சென்னை போராடி தோல்வியடைந்தது. அதைவிட முதலில் பஞ்சாப் பேட்டிங் செய்த போது அதன் வீரர் பனுக்கா ராஜபக்சா கொடுத்த ஒரு சில கேட்ச்களை சென்னை அணியினர் தவற விட்டதால் 20 – 30 ரன்களை அந்த அணி எக்ஸ்ட்ராவாக அடித்தது. ஒருவேளை அந்த கேட்ச்களை கச்சிதமாக பிடித்திருந்தால் சென்னைக்கு இந்தத் தோல்வி நிச்சயம் நேர்ந்திருக்காது.

Advertisement