PBKS vs MI : பஞ்சாப்பை சொந்த ஊரில் பதிலுக்கு தெறிக்க விட்ட மும்பை – மொஹாலியில் வரலாற்று சாதனை வெற்றி பெற்றது எப்படி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு ப்ரப்சிம்ரன் சிங் ஆரம்பத்திலேயே 9 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்தியூ ஷார்ட் உடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த கேப்டன் ஷிகர் தவான் 5 பவுண்டரியுடன் 30 (20) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் அதிரடியை துவங்கிய நிலையில் எதிர்புறம் சற்று மெதுவாக விளையாடிய மேத்யூ ஷார்ட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா களமிறங்கிய முதல் பந்திலிருந்தே விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். 12வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று இந்த சீசனில் ஏற்கனவே டெத் ஓவர்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் மும்பை பவுலர்களை கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

- Advertisement -

பதிலடி வெற்றி:
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட லிவிங்ஸ்டன் அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (42) ரன்களும் ஜிதேஷ் சர்மா 5 பவுண்டரி 2 சிக்சருடன் 49*27) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/3 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பைக்கு ரிஷி தவான் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 4 பவுண்டரியுடன் 23 (18) ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். ஆனால் அந்த நிலைமையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தமக்கே உரித்தான பாணியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக பஞ்சாப் பவுலர்களை மைதானத்தின் நாலாபுறங்களிலும் சிதறடித்து விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய இசான் கிசான் சிறப்பான அரை சதமடித்து அசத்தினார். அந்த வகையில் 6வது ஓவரில் இணைந்த இவர்கள் 16வது ஓவர் வரை அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட மும்பையின் வெற்றியை உறுதி செய்த போது சூரியகுமார் யாதவ் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 66 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய இசான் கிசானும் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 75 (41) ரன்கள் விளாசி அர்ஷிதீப் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஏற்கனவே ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வந்து அவுட்டான அந்த ஜோடிக்கு பின் களமிறங்கிய திலக் வர்மா அதை வீணடிக்காமல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26* (10) ரன்களும் டிம் டேவிட் 3 பவுண்டரிகளுடன் 19* (10) ரன்களும் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 18.5 ஓவரிலேயே 216/4 ரன்கள் எடுத்த மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

- Advertisement -

சுமாராக செயல்பட்ட பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக நாதன் எலிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த போட்டியில் பேட்டிங்கில் பெரிய ஸ்கோரை எடுத்த பஞ்சாப் பந்து வீச்சில் ஆரம்பத்தில் ரோகித் சர்மாவை அவுட்டாக்கியது தவிர்த்து ஆரம்பம் முதலே சுமாராகவே செயல்பட்டது. அதை பயன்படுத்தி வெறித்தனமாக பேட்டிங் செய்த மும்பை ஐபிஎல் வரலாற்றில் மொகாலி மைதானத்தில் 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக சாதனை படைத்தது.

இதையும் படிங்க:IPL 2023 : சத்தமின்றி 360 டிகிரியிலும் அடிக்கும் அவர் சீக்கிரம் இந்தியாவுக்கு சதங்களை அடிக்க போறாரு – மைக்கேல் வாகன் பாராட்டு

இதற்கு முன் பஞ்சாப் உட்பட வேறு எந்த அணியும் மொகாலியில் 200 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. அத்துடன் ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் 213 ரன்களை வெற்றிகரமாக துரத்திய மும்பை இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 200+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற வரலாறும் படைத்துள்ளது.

Advertisement