ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஐம்பதாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 12 (10) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்னில் அவுட்டாகி சென்றதால் 35/2 என ஹைதராபாத் தடுமாறியது. ஆனால் அப்போது அடுத்ததாக வந்த நித்திஷ் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
பரிதாப சஹால்:
ஆரம்பத்தில் சரிவை சரி செய்வதற்காக நிதானமாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக பேட்டிங் செய்தது. அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று ஹைதராபாத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் 39 பந்துகளில் அரை சதமடித்த டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (44) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலாக விளையாடிய நித்திஷ் ரெட்டி 30 பந்துகளில் 50 ரன்கள் கடந்து ராஜஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவருடன் அடுத்ததாக சேர்ந்த ஹென்றிச் கிளாசின் தம்முடைய பங்கிற்கு ராஜஸ்தான் பவுலர்களைப் பந்தாடி வேகமாக ரன்கள் குவித்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய இந்த ஜோடியால் 20 ஓவரில் ஹைதராபாத் 201/3 ரன்கள் குவித்தது.
நித்திஷ் ரெட்டி 3 பவுண்டரி 8 சிக்சருடன் 76* (42) ரன்களும் கிளாஸின் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 42* (19) ரன்களும் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். குறிப்பாக கடந்த 2 போட்டிகளில் சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் இந்த போட்டியிலும் 35/2 என தடுமாறியது. இருப்பினும் அதன் பின் அதிரடியாக விளையாடி நல்ல ஸ்கோர் எடுத்த அந்த அணி எங்களுக்கு சேசிங் தான் கொஞ்சம் கஷ்டம். ஆனால் முதல் பேட்டிங்கில் நொறுக்குவோம் என்பதை நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டால் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பா? கேஎல் ராகுல் நீக்கப்பட்டது ஏன்? அகர்கர் பதில்
ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக 2024 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வாகி அசத்திய அந்த அணியின் நட்சத்திர வீரர் சஹால் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 62 ரன்கள் வாரி வழங்கினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் 2020 சீசனில் மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் வீரர் அன்கீத் ராஜ்புட் 60 ரன்கள் முந்தைய சாதனையாகும்.