
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அஹமதாபாத் நகரில் ஐந்தாவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 243-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே 97* (42) ரன்கள் குவித்து அசத்தினார்.
அவருடன் துவக்க வீரர் ப்ரியன்ஸ் ஆர்யா 47 (23), சசாங் ஷிங் 44* (16) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். குஜராத் அணிக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சுப்மன் கில் 33 (14) ரன்னில் அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த பட்லர் தனது பங்கிற்கு அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்சன் அரை சதத்தை அடித்து 74 (41) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர் அரை சதத்தை விளாசினார். அவருடன் அடுத்ததாக களமிறங்கிய ரூத்தர்போர்ட் வெளுத்து வாங்கியதால் பஞ்சாப் வெற்றி கேள்விக்குறியானது.
ஆனால் அப்போது 15, 16, 17 ஆகிய ஓவர்களில் துல்லியமாக பவுலிங் செய்த பஞ்சாப் 5, 8, 5 ரன்களை மட்டுமே கொடுத்தது. குறிப்பாக பஞ்சாப் பவுலர் விஜயகுமார் வைசக் ஒய்ட் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசினார். அதை ரூத்தர்போர்ட் அடிக்க முடியாமல் கோட்டை விட்டது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.
ஏனெனில் அடுத்த ஓவரிலேயே பட்லர் 54 (33) ரன்னில் அவுட்டானதைத் தொடர்ந்து வந்த ராகுல் திவாட்டியா 6 (2) ரன்னில் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் ரூத்தர்போர்டு 46 (28) ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார். இறுதியில் ஷாருக்கான் 6* (1) எடுத்தும் 20 ஓவரில் 232-5 ரன்களை மட்டுமே எடுத்த குஜராத் போராடி தோற்றது.
இதையும் படிங்க: என் சதத்தை பற்றி கவலைப்படாம நொறுக்குன்னு ஸ்ரேயாஸ் அப்போவே சொல்லிட்டாரு.. திட்டம் பற்றி சசாங் பேட்டி
பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வெற்றிகரமாக துவங்கியது. குறிப்பாக 19வது ஓவரின் முடிவிலேயே 97 ரன்கள் எடுத்து அவர் தனது சதத்தை பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்குமாறு சசாங் சிங்கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய சசாங் கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்கள் அடித்தது பஞ்சாப் வெற்றிக்கு வித்திட்டது. அந்த வகையில் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ்க்கு வெற்றிப் பரிசாகக் கிடைத்தது. பஞ்சாப்புக்கு அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.