ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே ஒன்றாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 49வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜுடன் சேர்ந்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஹானே தடுமாற்றமாக விளையாடி 29 (24) ரன்களில் அவுட்டானார்.
அப்போது வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 2 (4) ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதனால் 70/3 என தடுமாறிய சென்னைக்கு மறுபுறம் அசத்தலாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து போராடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த சமீர் ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.
5க்கு 5 தோல்வி:
அடுத்த சில ஓவரிலேயே ருதுராஜூம் 62 (48) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த மொயின் அலி 15 (9) ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் எம்எஸ் தோனி 14 (11) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் சென்னை போராடி 162/7 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 163 ரன்களை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு ப்ரப்சிம்ரன் சிங் 13 (10) ரன்களில் ரிச்சர்ட் கிலீசன் வேகத்தில் அவுட்டானார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அடுத்ததாக வந்த ரிலீ ரோசவுடன் சேர்ந்து அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்பை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் ஜானி பேர்ஸ்டோ 46 (30) ரன்களில் சிவம் துபே வேகத்தில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் தாக்கூர் வேகத்தில் ரிலீ ரோசவ் 43 (23) ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் அடுத்ததாக வந்த சசாங் சிங் 25* (26) ரன்களும் கேப்டன் சாம் கரண் 26* (20) ரன்களும் எடுத்தனர். அதனால் 17.5 ஓவரிலேயே 163/3 ரன்கள் எடுத்த பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அத்துடன் கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் சென்னையை தோற்கடித்து பஞ்சாப் கிரிக்கெட் அணி வெற்றி கண்டுள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் சென்னையை அதிக முறை தொடர்ச்சியாக தோற்கடித்த அணி என்ற மும்பையின் சாதனையும் பஞ்சாப் சமன் செய்தது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகால இடைவெளியில் சி.எஸ்.கே அணியில் அறிமுகமானதன் மூலம் இங்கிலாந்து வீரர் – நிகழ்த்தியுள்ள சாதனை
இதற்கு முன் மும்பையும் 2018 – 19 காலக்கட்டத்தில் சென்னையை 5 முறை தொடர்ச்சியாக தோற்கடித்துள்ளது. மேலும் இதையும் சேர்த்து 10 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் பேட்டிங்கில் வெற்றிக்கு போராடுவதற்கு ரன்களை எடுக்காத சென்னை 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்து ப்ளே ஆஃப் செல்வதற்கு கடைசி 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.



