சூப்பரா ஸ்டார்ட் பண்ண இலங்கை அணியை சுருட்டி வீச இதுவே காரணம் – வெற்றிக்கு பின்னர் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது அக்டோபர் 16-ஆம் தேதி (இன்று) லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு துவக்கத்திலிருந்தே ரன்மழை பொழிந்தது. குறிப்பாக விக்கெட் இழப்பின்றி அந்த அணி 100 ரன்களை கடந்த வேளையில் முதல் விக்கெட்டாக 21.4-ஆவது ஓவரில் அணியின் எண்ணிக்கை 125-ஆக இருந்தபோது பதும் நிசங்கா 61 ரன்களில் ஆட்டமிஷந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன் பின்னர் 26.2-ஓவரில் அணியின் எண்ணிக்கை 157-ஆக இருந்தபோது 78 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி 157 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் நிச்சயம் இலங்கை அணி 300 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த 52 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து பரிதாப நிலையை சந்தித்தது.

இறுதியில் இலங்கை அணியானது 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களை மட்டுமே குவித்தது. இலங்கை அணி சார்பாக 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் மிட்சல் மார்ஷ் மற்றும் விக்கெட் கீப்பர் ஜாஸ் இங்கிலீஷ் ஆகியோர் அரைசதமும், மார்னஸ் லாபுஷேன் 40 ரன்கள் குவித்து அசத்தினர். பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை.

இன்றைய போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் பீல்டிங்கின் போது சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை அணி நன்றாகவே இந்த இன்னிங்சை துவங்கியது. ஆனாலும் மிடில் ஓவர்களில் நாங்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியதால் எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த போட்டியில் 300 ரன்கள் வரை அவர்கள் குவிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது.

இதையும் படிங்க : இலங்கை ஹாட்ரிக் தோல்வி.. முதல் வெற்றியுடன் ஆஸ்திரேலியா கம்பேக்.. புள்ளிப்பட்டியலில் நிகழ்ந்த பெரிய மாற்றம்

இந்த போட்டியினை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களின் சத்தம் எங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. இன்றைய போட்டியில் நாங்கள் அனைத்து விதமான துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். இதனை அப்படியே கொண்டு சென்று இனியும் வெற்றிகளை பெறுவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement