
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்க உள்ளது. கடந்த 2014க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
அதை விட வலுவான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்தியா முதல் முறையாக வீழ்த்தி 2018/19 பார்டர் – காவாஸ்கர் கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து ரஹானே தலைமையில் மீண்டும் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்தியா 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக வரலாறு படைத்தது.
தயாராக இருக்கோம்:
அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாடத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை வென்ற தாம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மட்டும் வென்றதில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார். எனவே இம்முறை இந்திய ரசிகர்களை அமைதியாக்கி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல தயாராகி வருவதாகவும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இடைவெளிக்குப்பின் எங்கள் வீரர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ளார்கள் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் நான் தொடர்ச்சியாக சுமார் 18 மாதங்கள் பந்து வீசினேன்”
“அதனால் தற்போதைய இடைவெளி எனக்கு 7 – 8 வாரங்கள் பந்து வீசுவதிலிருந்து முழுமையாக ஓய்வெடுக்க உதவியது. அதனால் என்னுடைய உடலும் புத்துணர்ச்சியடைந்து கோடைகாலத்தில் அசத்துவதற்கு தயாராகி வருகிறது. அதன் காரணமாக குறைவான காயங்களை சந்தித்து கொஞ்சம் அதிகப்படியான வேகத்தில் நீண்ட நேரம் என்னால் பந்து வீச முடியும் என்று நம்புகிறேன். இந்த ஒரு கோப்பையை மட்டுமே நான் இன்னும் வென்றதில்லை”
இதையும் படிங்க: டிபிஎல் 2024 : ரிஷப் பண்ட்க்கு கொடுக்கப்பட்ட கெளரவம்.. ஆனால் பேட்டிங்கில் செய்த சொதப்பலால் விமர்சித்த ரசிகர்கள்
“இந்த ஒரு கோப்பையை தான் எங்கள் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களும் வென்றதில்லை. கடந்த சில வருடங்களாக நாங்கள் ஒரு அணியாக மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளோம். இந்தியா நல்ல அணி. அவர்களுக்கு எதிராக நாங்கள் அதிகமாக விளையாடி வருவதால் அவர்களைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே அவர்களை இம்முறை வீழ்த்துவதற்கான நல்ல இடத்தில் நாங்கள் இருப்பதாக உணர்கிறோம்” என்று கூறினார்.