
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2021, 2022 ஐபிஎல் தொடர்களில் அதிரடியான வேகத்தில் வீசினார். குறிப்பாக 150 – 155 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசிய அவர் விராட் கோலி போன்ற பலரது கவனத்தை ஈர்த்தார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்தியராகவும் அவர் சாதனை படைத்தார்.
அதன் காரணமாக 2022 அயர்லாந்து தொடரில் அறிமுகமான அவர் வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசியதால் ரன்களை வாரி வழங்கினார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் தொடரில் கொஞ்சம் நன்றாக விளையாடியதால் 2023 நியூசிலாந்து தொடரில் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் ஓரளவு நன்றாக செயல்பட்ட உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் மீண்டும் ரன்களை வாரி வழங்கிய அவர் ஹைதராபாத் அணியில் கழற்றி விடப்பட்டார். அதனால் இந்திய அணியிலும் தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெறும் 4 ஓவர்களில் 24 பந்துகளை வீசுவதை விட உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதே அதிக அனுபவத்தை கொடுக்கும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் உம்ரான் மாலிக் அதிகமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் வந்ததே இந்திய அணியில் தடுமாறக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடாமல் தடுமாறும் வீரர்களுக்கு உம்ரான் மாலிக் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் ஐபிஎல் தொடரிலிருந்து வந்தார்”
“அது வெறும் 24 பந்துகளை கொண்ட போட்டி. சில நேரங்களில் அங்கே உங்களுக்கு 24 பந்துகள் கூட வீச வாய்ப்பு கிடைக்காது. அந்த 24 பந்துகளை வீசுவதிலும் சிவப்பு நிற பந்தை வீசுவதற்கு நிகரான அழுத்தம் இருக்காது. எனவே டி20 ஃபார்மட்டை வைத்து ஒருவரை மதிப்பிடக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஐபிஎல் தொடரில் பந்து வீசும் போது சலுகைகளுடன் சேர்ந்து பின் விளைவுகளும் கிடைக்கின்றன”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 ஏலத்தில் ரோஹித் சர்மாவை 50 கோடிக்கு வாங்குவீர்களா? லக்னோ ஓனர் சஞ்சீவ் பேட்டி
“அதனால் அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியிருக்கிறாரா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அங்கே நீங்கள் ஒரு செசனில் முழுமையாக விளையாடும் போது பல்வேறு தருணங்களில் உங்களுடைய பவுலிங் மற்றும் உடல் சோதிக்கப்படும். சில நேரங்களில் 6 செஷனல் கூட இருக்க வேண்டியிருக்கும். அது போன்ற சவாலான சூழ்நிலைகளை நீங்கள் கடந்து வர வேண்டும்” என்று கூறினார்.