
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 3வது போட்டியில் அமெரிக்காவை தன்னுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாகும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவரை ஏராளமான ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் பாண்டியா அசத்துவார் என்று யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
பாண்டியாவின் கம்பேக்:
அவர்கள் சொன்னது போலவே உலகக்கோப்பையில் அசத்தத் துவங்கியுள்ள பாண்டியா தம்முடைய தரத்தை காண்பித்துள்ளார் என்று சொல்லலாம். இந்நிலையில் எவ்வளவு பெரிய விமர்சனங்கள் கிண்டல்கள் வந்தாலும் தன் மீது ஹர்திக் பாண்டியா எப்போதும் சந்தேகப்பட்டதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் விளையாடுவதால் அவருக்குள் இருக்கும் இயற்கையான திறமை வெளிப்படுவதாகவும் மாம்ப்ரே பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தன்னுடைய திறமையில் எப்போதும் சந்தேகப்படக்கூடாது என்பதே ஹர்திக் பாண்டியாவின் தன்னம்பிக்கையாகும். சில நேரங்களில் நீங்கள் யாராக இருந்தாலும் நல்ல பார்மில் இருக்க மாட்டீர்கள்”
“தொடர்ச்சியாக நன்றாக வீசினாலும் உங்களால் ரிதத்தை பெற முடியாது. அதுவே அவருடைய நெறிமுறையாகும். அவர் நன்றாக வருவார் என்பது எங்களுக்கு தெரியும். ஒருவேளை விமர்சனங்களால் கவலைப்பட்டிருந்தால் மோசமான நேரங்களில் அவர் எதையும் செய்திருக்க மாட்டார். அப்படி அவர் வேலை செய்யாமல் போயிருந்தால் அது தான் கவலைக்குரிய விஷயமாகும். அவருடைய நெறிமுறைகளை நான் பின்பற்றியுள்ளேன்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் போட்டியில் சொதப்பிய துபே நீக்கப்படுவாரா? ரவீந்திர ஜடேஜா எப்போது அசத்துவார்.. பவுலிங் கோச் பேட்டி
“எனவே ஓரிரு போட்டிகளுக்கு பின்பும் அதே நெறிமுறையை அவர் பின்பற்றினால் தாமாக பந்து வீச்சில் ரிதம் நன்றாக வரும். அந்த ரிதத்தை பெற்றதால் தற்போது அவர் ஐபிஎல் தொடரிலும் இந்த தொடரிலும் எப்படி செயல்படுகிறார் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.