ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய மூன்றாவது போட்டியில் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 2 போட்டிகளிலும் சுமாராக விளையாடியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதே போல முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் இதுவரை அசத்தவில்லை.
அனுபவம் பேசும்:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் முக்கிய நேரத்தில் களமிறங்கிய அவர் கோல்டன் டக் அவுட்டாகி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல பந்து வீச்சில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் விக்கெட்டை எடுக்காத அவர் ஆல் ரவுண்டராக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். மேலும் கடந்த போட்டியில் மொத்தமாக சொதப்பிய சிவம் துபே நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் திறமையை சந்தேகப்பட வேண்டாம் என்று இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் ஜடேஜா இந்தியாவுக்கு போட்டிகளை வென்று கொடுப்பார் என்று தெரிவிக்கும் அவர் சிவம் துபேவும் அசத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது அணி விளையாட்டு அல்லவா? உங்களுக்கு 11 வீரர்கள் விளையாடுவார்கள். இருப்பினும் அந்த அனைவரும் ஒரே நேரத்தில் ஃபார்மில் இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது”
“அடுத்ததாக நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் அசத்துவார்கள். தனிப்பட்ட முறையில் இது பற்றி எங்களுடைய வீரர்களிடம் ராகுல் மற்றும் விக்கி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீங்கள் ஒரு நேரத்தில் ஒற்றை போட்டியை எதிர்பார்க்க முடியும். இது பெரிய தொடராகும். ரவீந்திர ஜடேஜா போன்றவர் நிறைய அனுபவத்தை கொண்டவர். அவர் தன்னுடைய வழியில் விளையாடுவதற்கு ஒரு நல்ல போட்டி மட்டுமே தேவை”
இதையும் படிங்க: விராட் கோலியிடம் உள்ள பிரச்சனையே இது தான்.. யாராச்சும் எடுத்து சொல்லுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்
“அவருடைய திறமை மற்றும் அனுபவம் நமக்கு தெரியும். எனவே அவர் அடுத்து வரும் போட்டிகளை வென்று கொடுப்பார். எனவே ஜடேஜா மட்டுமின்றி துபே போன்ற மற்ற வீரர்கள் மீதும் எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. நீங்கள் ஒரு போட்டியில் சுமாராக விளையாடினால் மக்கள் அதிருப்தியுடன் பேசுவார்கள். பரவாயில்லை ஆனால் அணி தங்கள் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. அது தான் இந்த தொடரில் முக்கியம்” என்று கூறினார்.



