
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்றது. எனவே இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அந்த சூழ்நிலையில் இம்முறை ஆஸ்திரேலிய தொடரில் மயங் யாதவ் கருப்பு குதிரையாக இருப்பார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே 2024 ஐபிஎல் தொடரின் இறுதியில் காயத்தை சந்தித்த அவர் குணமடையும் பட்சத்தில் ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மயங் யாதவ் ஆஸ்திரேலியாவில் விளையாடும் தகுதியை கொண்டிருப்பதாக பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலை அவுட்டாக்கிய மயங் யாதவ் மற்றொரு ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை 156 கி.மீ வேகத்தில் போல்ட்டாக்கினார். அந்த ஒரு விக்கெட் அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடு தகுதியானவர் என்பதை காண்பித்ததாக பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“அந்த ஒரு விக்கெட் அனைத்தையும் சொல்லும். அந்த விக்கெட் இந்தக் குழந்தையிடம் ஏதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை சொல்கிறது. ஏனெனில் கிரீன் தரமான பிளேயர். ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டவர். ஆனால் அப்படிப்பட்ட அவர் மயங் யாதவ் வேகத்தில் அவுட்டானதும் பயமடைந்ததாக நான் உணர்ந்தேன். கிரீஸில் சிக்கிக்கொண்ட அவர் வேகத்தால் வீழ்த்தப்பட்டார்”
“அது போன்ற பந்துகள் மயங் யாதவின் திறனை சொல்கிறது. எனவே அவர் தயாராக இல்லை என்றால் விளையாட வைக்க வேண்டாம் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த வயதில் தான் அவர் பந்து வீச வேண்டும். எந்தளவுக்கு அதிகமாக பந்து வீசுகிறீர்களோ அந்தளவுக்கு கட்டுப்பாடு மற்றும் உங்களுடைய உடலின் திறன் தெரிய வரும். அதனால் காயமடைந்துள்ளார் என்று சொல்லி அவரை பஞ்சுத் துணியில் துடைக்க முடியாது”
இதையும் படிங்க: மெய்ன் பில்லரே இல்லை.. அந்த ஓட்டையை பயன்படுத்தி இங்கிலாந்தை தோற்கடிப்போம்.. இலங்கை கேப்டன் உறுதி
“மயங் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அங்கே ஒரு சீசன் முழுமையாக விளையாடும் போது உங்களுடைய பவுலிங், உடல் பலம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தன்னம்பிக்கையும் கொடுக்கும்” என்று கூறினார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் 155க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் பந்து வீசி மிரட்டிய மயங் யாதவ் தனது முதலிரண்டு போட்டிகளிலேயே ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.