இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இலங்கை வென்றது. கால் நூற்றாண்டுக்கு பின் பெற்ற அந்த வெற்றியை கொண்டாடிய இலங்கை அணியினர் அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை விளையாடுகிறது. அந்த தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்தத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே டி20 போல அதிரடியாக விளையாடுகிறது. அந்த அணுகு முறையை பின்பற்றி வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் இதுவரை இங்கிலாந்து தோற்காமல் வெற்றி நடை போடுகிறது.
பென் ஸ்டோக்ஸ் விலகல்:
இருப்பினும் இத்தொடரில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக ஓலி போப் தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்தக்கூடிய தூணை போன்ற வீரர் என இலங்கை கேப்டன் தனஞ்செயா டீ சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால் சமநிலையில் ஏற்பட்டுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இங்கிலாந்தை தோற்கடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் முதல் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “பென் ஸ்டோக்ஸ் தான் இங்கிலாந்து அணியில் சமநிலையை ஏற்படுத்தும் வீரர். பேட்டிங், பவுலிங் போன்ற எதுவாக இருந்தாலும் அவர் தான் இங்கிலாந்தின் முக்கிய வீரர்”
இங்கிலாந்தை வீழ்த்துவோம்:
“அவருக்கு பதிலாக புதிய பையன் (டான் லாரன்ஸ்) துவக்க வீரராக விளையாட உள்ளார். கண்டிப்பாக அவர் அழுத்தத்தின் கீழ் விளையாடுவார். மறுபுறம் எங்கள் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே போல எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் பிரபத் ஜெயசூர்யா உள்ளார். ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நன்றாக விளையாடினால் போட்டியை நாங்கள் வெல்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்”
இதையும் படிங்க: இந்த டைம் நிரூபிக்குறாங்களான்னு பாப்போம்.. 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் வின்னரை கணித்த கில்கிறிஸ்ட்
“இயன் பெல் இங்கிலாந்துக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய தரமான வீரர். இத்தொடரில் எங்களுடைய பேட்டிங் பயிற்சியாளராக செயல்படும் அவரிடம் நாங்கள் நிறைய ஆலோசனைகளை பெற்றோம்” என்று கூறினார். இந்த நிலையில் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 15 தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



