ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால் இப்போதே அத்தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.
எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் கடந்த 2 தோல்விகளுக்காக இம்முறை இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 3 – 1 என்ற கணக்கில்
என்று ஆஸ்திரேலியா வெல்லும் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார்.
கடினமான தொடர்:
அதே போல இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர். இந்நிலையில் உலகின் டாப் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இத்தொடரில் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி வெல்ல வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து வைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை வீழ்த்தி தங்களை சாம்பியன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளதாகவும் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எனவே ஒரு ஆஸ்திரேலியராக இம்முறை தமது நாடு வெல்லும் என்று கணிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது அந்த 2 அணிகளுக்கும் மிகவும் கடினமான மற்றொரு தொடராக இருக்கும்”
ஆஸ்திரேலியா வெல்லும்:
“ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் வலுவானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது இந்தியாவுக்கு தெரியும். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு வரிசை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் இங்குள்ள சூழ்நிலைகளில் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் பந்து வீசுவார்கள். அவர்களிடம் திறமையான பேட்டிங் வரிசையும் உள்ளது”
இதையும் படிங்க: நான் உடைஞ்சி போயி இருந்தபோது விராட் கோலி தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தாரு – யாஷ் தயாள் பேட்டி
“எனவே இந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இருப்பினும் இயற்கையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு கொடுப்பேன். எனவே இம்முறை அவர்கள் வெற்றியின் பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அது சண்டை மிகுந்ததாக இருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் கணிப்புகளை பொய்யாக்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெறும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



