
இந்திய கிரிக்கெட் அணி எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை 2008க்குப்பின் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அதே போல 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி கோப்பைகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. அத்துடன் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அந்த சூழ்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கடந்த காலங்களைப் போலவே அந்தத் தொடரிலும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்தியா தங்களது போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கையை விட்டதாக செய்திகள் வெளிவந்தன.
மறுபுறம் பாகிஸ்தானுக்கு வரவில்லையெனில் இந்தியாவை புறக்கணித்து விட்டு தொடரை நடத்துவோம் என்று அந்நாட்டு வாரியம் தெரிவித்தது. ஆனால் தற்போது இந்தியா வரவில்லையெனில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஒளிபரப்பு பார்வைகள் மிகவும் குறைந்து விடும். அதனால் இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்த முடியாது என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாக தற்போது இந்தியாவை தங்களுடைய நாட்டில் விளையாட வைக்க பாகிஸ்தான் புதிய ஐடியாவை உருவாக்கியுள்ளது. அதாவது 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் வரும் பிப்ரவரி 20, 23, மார்ச் 2 ஆகிய தேதிகளில் இந்தியா தங்களுடைய லீக் போட்டிகளில் முறையே வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் பாதுகாப்பு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இந்தியா விளையாடும் போட்டிகளை லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது. அங்கே ஒவ்வொரு போட்டியிலும் விளையாடிய பின் இந்திய அணியை லாகூரிலிருந்து உடனடியாக அருகில் இருக்கும் டெல்லி அல்லது சண்டிகருக்கு திருப்பியனுப்ப பாகிஸ்தான் வாரிய முடிவெடுத்துள்ளது. அதனால் இந்தியா தங்களுடைய போட்டிகளை சொந்த ஊரான டெல்லி அல்லது சண்டிகரில் இருந்து கொண்டே பாகிஸ்தானில் விளையாட முடியும்.
இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பில்லை – காரணம் இதுதான்
அதே சமயம் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றாலும் இல்லையென்றாலும் அது லாகூரில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் வாரியம் உறுதியாக இருக்கிறது. இந்த புதிய திட்டம் பற்றிய விரிவான கடிதத்தை பிசிசிஐக்கு பாகிஸ்தான் வாரியம் அனுப்பியுள்ளதாக கிரிக்பாஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு சம்மதம் தெரிவிக்குமாறு பிசிசிஐக்கு பாகிஸ்தான் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.