சென்னைல்லாம் ஒரு ஊராங்க, 2023 உலக கோப்பையில் விளையாட முடியாது – பாகிஸ்தான் புகார், கலாய்க்கும் ரசிகர்கள்

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் விளையாடி வருகின்றன. இருப்பினும் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த ஆசிய கவுன்சில் தலைவர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபரில் உங்கள் நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று அறிவித்தது. அப்போதிலிருந்து இருநாட்டுக்கும் இடையே அனல் பறந்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் 4 லீக் போட்டிகளை மட்டும் அந்நாட்டில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள ஆசிய கவுன்சில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டுமல்லாமல் ஃபைனல் உட்பட எஞ்சிய 9 போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தானின் புகார்:
அதனால் இந்த பிரச்சினை முடிந்தது என்று நினைத்தாலும் 2023 உலக கோப்பையில் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுக்கும் இந்திய அரசின் தலைவர்கள் குஜராத்தில் இருப்பதால் அந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று தெரிவித்த அந்நாட்டு வாரிய தலைவர் நஜாம் சேதி அப்போட்டியை பெங்களூரு, ஹைதெராபாத் போன்ற தென் மாநிலங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் 1999ஆம் ஆண்டு மறக்க முடியாத டெஸ்டில் இந்தியாவின் தோல்வியை தாண்டி சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானுக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்த ரசிகர்களை கொண்ட தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் அந்த அணியின் 2 லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்று ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தேச அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் சேப்பாக்கம் மைதானம் சமீப காலங்களாகவே சுழலுக்கு சாதகமாக இருந்து வருவதால் அங்கு விளையாடுவதற்கும் பாகிஸ்தான் வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதிலும் தங்களுடைய 2வது பரம எதிரியாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணியில் ரசித் கான், முஜிபுர் ரகுமான், நூர் அகமது போன்ற தரமான ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அப்படி அவர்களுக்கு எதிராக சென்னையில் விளையாடினால் தோல்வியை சந்திக்க நேரிடலாம் என்று கருதும் பாகிஸ்தான் வாரியம் அந்த ஒரு போட்டியை மட்டுமாவது வேறு மைதானத்திற்கு மாற்றுமாறு பிசிசிஐயிடம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏனெனில் கடந்த 2022 ஆசியக் கோப்பையில் இரு அணி வீரர்களும் சண்டை போட்டுக் கொண்டதுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தானிடம் 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. எனவே கத்துகுட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானிடம் மீண்டும் தோல்வியை சந்திக்க விரும்பாத காரணத்தாலேயே பாகிஸ்தான் இந்த கோரிக்கையை முன்னெடுப்பதாக தெரிய வருகிறது.

- Advertisement -

ஆனால் இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தில் விளையாட முடியாது என்று சொல்வதற்கான காரணத்தை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் சென்னையில் விளையாட மறுக்கும் காரணம் குழந்தைத்தனமானது என கிண்டலடிக்கின்றனர். குறிப்பாக அப்படியானால் உங்களது அணிக்கு தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தெரியாது என்று நீங்களே சொல்கிறீர்களா என்றும் பாகிஸ்தானை ரசிகர்கள் கலாய்கின்றனர்.

இதையும் படிங்க:வீடியோ : கவாஜா வெறித்தனம் – தப்பு பண்ணிட்டீங்களே இங்கிலாந்து, பழைய ஸ்டைலில் திருப்பி அடிக்கும் ஆஸி

அத்துடன் உலகக்கோப்பையில் தைரியமாக வந்து விளையாடுவதை விட்டுவிட்டு இப்படி மைதானத்தை மாற்றுங்கள் என பேசும் நீங்கள் பேசாமல் இந்த உலகக் கோப்பையையே தார் பிட்ச்களை கொண்ட உங்கள் நாட்டுக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரிக்கை வையுங்கள் என்றும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை கலாய்கின்றனர்.

Advertisement