
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து வங்கதேசத்தை குறைத்து மதிப்பிட்டு டிக்ளேர் செய்தவதாக அறிவித்தது.
ஆனால் பதிலுக்கு அட்டகாசமாக விளையாடிய வங்கதேசம் 565 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானை 146 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் கடைசியில் 30 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி தொட்டு வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் சாதனை படைத்தது.
கடந்த 2001 முதல் இதற்கு முன் வரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளில் வங்கதேசம் 12 தோல்வி 1 டிராவை சந்தித்தது. இருப்பினும் அந்த தோல்வியை சரித்திரத்தை தற்போது மாற்றியுள்ள வங்கதேசம் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களின் குறைந்தபட்ச ஸ்கோரை (146) பதிவு செய்து மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்றது.
பொதுவாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கூட வேகத்துக்கு சாதகமான மைதானங்களின் பிட்ச் கடைசி நாளில் சுழலுக்கு சாதகமாக மாறும். அதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அணிகள் கூட குறைந்தது ஒரு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது வாடிக்கையாகும். ஆனால் இப்போட்டியில் ஒரு ஸ்பின்னரை கூட தேர்ந்தெடுக்காத பாகிஸ்தான் அனைத்து பவுலர்களையும் வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்தது.
அந்த மட்டமான முடிவு பாகிஸ்தானுக்கு தோல்வியை கொடுத்தது. ஏனெனில் 2வது இன்னிங்ஸில் வங்கதேச ஸ்பின்னர்கள் 7 விக்கெட்டுகளை சாய்த்து பாகிஸ்தானை வீழ்த்தினர். அது போக வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்து கடைசியில் பரிதாபமாக தோற்றது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 63 வருடங்கள் கழித்து டிக்ளேர் செய்த போட்டியில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: டிரேடிங் முறையில் ஷிவம் துபேவை வெளியேற்ற இருக்கும் சி.எஸ்.கே – எந்த அணிக்கு தெரியுமா?
கடைசியாக கடந்த 1961ஆம் ஆண்டு லாகூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இதே போல டிக்ளேர் செய்து பாகிஸ்தான் தோற்றது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் டிக்ளேர் செய்த பின் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் பரிதாபமான உலக சாதனை படைத்துள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 8 தோல்வி 1 ட்ராவை சந்தித்துள்ள பாகிஸ்தான் 1294 நாட்களாக வெற்றியை பதிவு செய்ய முடியாமல் பாதாளத்தில் தவிக்கிறது.