2023 உ.கோ பற்றி இந்தியா மீது ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக 2 புகார் செய்த பாகிஸ்தான்.. முழுமையான விவரம்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களின் முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகச் சிறப்பான வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக 154/2 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தானை வெறும் 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் ரோகித் சர்மாவின் அதிரடியால் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக தோற்கடித்து தங்களுடைய கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் வரலாற்றை மாற்றுவோம் என்று பேசிய பாகிஸ்தான் களத்தில் மோசமாக செயல்பட்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்தியா மீது புகார்:
முன்னதாக அப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” உத்வேக பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்றும் அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் விமர்சித்திருந்தார். அதனால் இது ஐசிசிக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் தொடர் போல் இருப்பதாக விமர்சித்த அவர் இவை அனைத்திற்கும் ஃபைனலுக்கு வந்து பதிலடி கொடுப்போம் என்று இந்தியாவை எச்சரித்திருந்தார்.

அது போக அப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட்டாகி பெவிலியன் சென்ற போது சில இந்திய ரசிகர்கள் மத அடிப்படையிலான கோஷங்களை எழுப்பியதும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியா மீது 2 புகார்களை ஐசிசி இடம் பாகிஸ்தான் வாரியம் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. முதலில் இந்த உலகக் கோப்பை பற்றிய செய்திகளை பாகிஸ்தான் மக்களுக்கு கொடுப்பதற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு வேண்டுமென்றே தாமதமாக விசா கொடுத்ததாக பாகிஸ்தான் வாரியம் புகார் செய்துள்ளது.

- Advertisement -

அத்துடன் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியினர் மத அடிப்படையில் சம்பந்தமின்றி குறிவைக்கப்பட்டதாகவும் புகார் செய்துள்ள பாகிஸ்தான் வாரியம் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்கான விசா தாமதம் மற்றும் 2023 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்து ஐசிசியிடம் மற்றுமொரு முறையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது”

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த 38 வயது வீரர் யார்? – அவர் குறித்த சுவாரசிய தகவல் இதோ

“அத்துடன் 14 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணியை குறிவைத்து தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பாகவும் பிசிபி ஏற்கனவே புகார் அளித்துள்ளது” என்று அறிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் நடத்தப்படும் உலக கோப்பையில் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை பிட்ச் நேர்மையாக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement