முதல் அணியாக வங்கதேசத்தை நாக் அவுட் செய்த பாகிஸ்தானுக்கு.. செமி ஃபைனல் வாய்ப்பு இன்னும் இருக்கா?

PAk vs BAN
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 31ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 31வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தன்சித் ஹசன் 0, நஜூமுள் சாண்டோ 4 ரன்களில் ஷாஹீன் அப்ரிடி வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த முஸ்பிகர் ரஹீமும் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் 23/3 என்ற சுமாரான தூக்கத்தை பெற்று தடுமாறிய வங்கதேசத்தை 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றியால் லிட்டன் தாஸ் 45 (64) ரன்களில் அவுட்டானார். அவருடன் மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமதுல்லா 56 ரன்கள் எடுத்திருந்த போது ஷாஹீன் அப்ரிடி வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களில் கேப்டன் சாகிப் அல் ஹசன் போராடி 43 ரன்களும் மெஹதி ஹசன் 25 ரன்களும் எடுத்தனர். இதர வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் 45.1 ஓவரிலேயே வங்கதேசத்தை 204 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 3, ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 205 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பவர் பிளே ஓவர்கள் கடந்தும் நங்கூரமாக நின்ற இந்த ஜோடி 22 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடி 128 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது அப்துல்லா ஷபிக்கை 68 (69) ரன்களில் அவுட்டாக்கிய மெகதி ஹசன் அடுத்ததாக வந்த கேப்டன் பாபர் அசாமையும் 9 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்க நினைத்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய பகார் ஜமானும் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 81 (74) ரன்களில் மெஹதி ஹசன் சுழலில் சிக்கினார். ஆனாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் அடுத்து வந்த முகமது ரிஸ்வான் அதிரடியாக 26* (21) ரன்களும் இப்திகார் அகமது 17* (15) ரன்களும் எடுத்ததால் 32.3 ஓவரிலேயே 205/3 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இப்படில்லாம் நடக்கும்ன்னு நினச்சதில்லை.. நான் எப்போவும் அதுக்காக விளையாடல.. கிங் கோலி ஓப்பன்டாக்

அதனால் 4 தொடர்ச்சியான தோல்விகளை ஒரு வழியாக நிறுத்திய பாகிஸ்தான் இத்தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் 10% செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. மறுபுறம் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாத வங்கதேசம் 7 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்து இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

Advertisement