பிக்பேஷ் 2024 : 10 ஃபோர்ஸ் 12 சிக்ஸ்.. கெயிலின் மாஸ் சாதனையை நொறுக்கி வெறியாட்டம் போட்ட ஆஸி வீரர்

Josh Brown
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக் பேஷ் கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 22ஆம் தேதி குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்ற முக்கியமான சேலஞ்சர் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. அதில் வெல்லும் அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் 2 அணிகளும் களமிறங்கன.

அப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சார்லி வாக்கிம் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் நாதன் மெக்ஸ்வீனியுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் ப்ரவுன் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

வெறித்தனமான சாதனை:
அதில் மெக்ஸ்வீனி ஒருபுறம் பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வெளுத்து வாங்கிய ஜோஸ் ப்ரவுன் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ரன்கள் தாண்டினார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மெக்ஸ்வீனி 33 (29) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் நேரம் செல்ல செல்ல பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பிரௌன் வெறும் 41 பந்துகளில் சதமடித்தார்.

அதன் வாயிலாக பிக்பேஷ் வரலாற்றில் 2வது அதிவேகமான சதத்தை அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் சாதனையை அவர் சமன் செய்தார். இதற்கு முன் 2023 சீசனில் ஹோபார்ட் அணிக்கு எதிராக மெல்போர்ன் அணிக்காக 41 பந்தில் மேக்ஸ்வெலும் சதமடித்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து வெறித்தனமாக விளையாடிய அவர் 10 பவுண்டரி 12 சிக்சருடன் 140 (57) ரன்களை 245.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார்.

- Advertisement -

இதன் வாயிலாக பிக்பேஷ் தொடரின் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் (12) அடித்த வீரர் என்ற மாபெரும் மாஸ் சாதனையையும் ஜோஸ் ப்ரவுன் படைத்தார். இதற்கு முன் ஜாம்பவான் கிறிஸ் கெயில், கிரைக் சிமன்ஸ், கிறிஸ் லின் (2 முறை) ஆகியோர் ஒரு போட்டியில் தலா 11 சிக்சர்கள் அடித்ததே முந்திய சாதனையாக இருந்தது. இறுதியில் அவருடைய அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் பிரிஸ்பேன் 214/7 ரன்கள் எடுத்த நிலையில் அடிலெய்ட் சார்பில் அதிகபட்சமாக டேவிட் பெயின், கேமரூன் போய்ஸ், லாய்ட் போப் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படிங்க: பிட்ச்ல கைவெச்சா இந்தியாவை.. தெறிக்க விட ஜடேஜாவுக்கு நிகரான ஸ்பின்னர் எங்களிடம் இருக்காரு.. மைக்கேல் வாகன்

அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய அடிலெய்ட் முடிந்தளவுக்கு போராடியும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.5 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி நீல்சன் 50, தாமஸ் கேலி 41 ரன்கள் எடுக்க பிரிஸ்பேன் சார்பில் அதிகபட்சமாக ஸ்பென்சர் ஜான்சன் 3, கேப்டன் மெக்ஸ்வீனி 3 விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் வாழ்வா – சாவா போட்டியில் ஜோஸ் ப்ரவுன் அதிரடியால் 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிஸ்பேன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement