கெட்டப், கேப்டன் மாற்றியும் கேரக்டர் மாறாத ஆர்சிபி ! மீண்டும் வெளியேறிய பரிதாபம் – 2022இன் சொதப்பல்கள் இதோ

RCB Faf Du Plessis
- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகளுக்கு உள்ள ரசிகர்களுக்கு ஈடாக கோப்பையை வெல்லாமலே அதிக ரசிக பட்டாளங்களை கொண்ட ஒரு அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகும். 2008 முதல் இப்போது வரை அந்த அணியில் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், விராட் கோலி போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் விளையாடி அதிகபட்ச ஸ்கோர், அதிக சதங்கள் போன்ற சாதனைகளை படைத்ததே அதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் என்னதான் அது போன்ற உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் விளையாடினாலும் சாதாரண போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அந்த அணி ஒவ்வொரு வருடமும் நாக் – அவுட் போன்ற ஏதோ ஒரு முக்கியமான தருணத்தில் சொதப்பி தோல்வி அடைவது வழக்கமாகி வருகிறது.

RCB Faf Virat

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2013 – 2021 வரை எவ்வளவோ போராடியும் அந்த அணியால் கோப்பையை கடைசி வரை முத்தமிட முடியவில்லை. அதனால் இம்முறை எப்படியாவது கோப்பையை வென்ற தீரவேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கொண்ட டுப்லஸ்ஸிசை நிறைய கோடிகள் செலவழித்து வாங்கி புதிய கேப்டனாக அறிவித்து, ஜெர்சியை மாற்றி, புது அணியாக புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது.

சூப்பர் ஓப்பனிங், சுமார் பின்சிங்:
1. அதற்கேற்றாற்போல் பங்கேற்ற முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பாதி உறுதி செய்தது.

Rajat Patidar 112

2. ஆனால் வழக்கம்போல சொதப்ப ஆரம்பித்த அந்த அணி அடுத்த 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது. நல்லவேளையாக 4-வது இடத்தில் இருந்த டெல்லியை அதன் கடைசி லீக் போட்டியில் கடைசியிடம் பிடித்த மும்பை தோற்கடித்து வெளியேற்றியது. அதனால் மும்பையின் தயவாலும் உதவியாலும் தப்பிய பெங்களூரு 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

3. இதுபோல் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கே அந்த அணி தடுமாறுவது புதிதல்ல. ஆம் 2020இல் முதல் 7 போட்டிகளில் 5 வெற்றி பெற்ற அந்த அணி அடுத்த 7 போட்டிகளில் 2 வெற்றி மட்டுமே பெற்று தட்டுத்தடுமாறி சென்றது. 2021 சீசனிலும் அதே கதையாக முதல் 7 போட்டிகளில் 5 வெற்றியும் அடுத்த 8 போட்டிகளில் 4 வெற்றியும் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.

RCB Celebrations Virat Kohi Glenn Maxwell

4. அந்த 2020, 2021 ஆகிய 2 வருடங்களிலும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடிய பெங்களூரு தோல்வியடைந்து வெளியேறியது. ஆனால் இம்முறை தடுமாற்றமாக மும்பையின் உதவியுடன் கிடைத்த எலிமினேட்டர் போட்டியில் அபார வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

5. அதிலும்கூட விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், டுப்லஸ்ஸிஸ் போன்ற நட்சத்திரங்கள் சொதப்பிய நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ரஜத் படிதார் அதிரடியாக சதமடித்த காப்பாற்றியதால் வெற்றி கிடைத்தது. இல்லையேல் அப்போதே வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும்.

patidar 1

வெளியேறிய பெங்களூரு:
அந்த சூழ்நிலையில் மே 27இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் எதிர்கொண்ட அந்த அணி முக்கிய தருணத்தில் சொதப்பியது. ஆம் அந்த நாக்-அவுட் போட்டியில் வழக்கம்போல விராட் கோலி 7 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 9/1 எனத் தடுமாறிய அந்த அணியை மீண்டும் அதே ரஜத் படிதார் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய டு பிளசிஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 25 (27) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 24 (13) ரன்கள் சேர்த்தாலும் திடீரென ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனாலும் அதிரடியை கைவிடாமல் போராடிய ரஜத் படிதார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் இந்த வருடம் முழுவதும் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக்க்கும் பெங்களூருவின் ராசியை போல இந்த முக்கியமான போட்டியில் 6 (7) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

Rajat Patidar 58

இந்த போட்டியில் கூட ரஜத் படிடார் அதிரடியால் முதல் 13 ஓவர்களில் 107/3 என்ற நிலையில் இருந்த பெங்களூரு கடைசி நேரத்தில் சொதப்பி அடுத்த 7 ஓவர்களில் வெறும் 50/6 ரன்கள் மட்டுமே எடுத்ததே தோல்வியை பரிசளித்தது. அதை துரத்திய ராஜஸ்தான் ஜோஸ் பட்லரின் அதிரடியான 106* (60) ரன்கள் சதத்தால் எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டி நடந்த அகமதாபாத் மைதானம் அளவில் பெரியது என்ற நிலையில் 158 ரன்கள் கட்டுப்படுத்தக்கூடிய இலக்கு என்ற நிலையில் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு பந்துவீச்சிலும் போராடாமல் சுமாராகவே செயல்பட்டு வெளியேறியது. மொத்தத்தில் கெட்டப்பை மாற்றி கேப்டனை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாத பெங்களூரு மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வரலாற்றில் 15-ஆவது முறையாக ஏமாற்றத்துடன் வெளியேறியது.

இதையும் படிங்க : நாக் – அவுட் என்றாலே அலர்ஜி. இவரு இப்படி ஆடுனா கப் எப்டி ஜெயிக்க முடியும்? – மோசமான புள்ளிவிவரம் இதோ

இன்று மட்டுமல்ல எப்போதுமே முக்கியமான தருணங்களில் ஏற்படும் அழுத்தத்திற்கு அஞ்சி சொதப்பாமல் தைரியமாக நின்று போராடி வெற்றி காணும் வரை பெங்களூரு அணி கோப்பையை வெல்லவே முடியாது.

Advertisement