தமிழக ரசிகர்களே அதிருப்தியடையும் அளவுக்கு மீண்டும் சொதப்பிய தமிழக வீரர் – என்ன நடந்தது?

Dinesh Karthik 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்கிய 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முக்கியமான ஒரு அணியாகும். ஏனெனில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி , விராட் கோலி பொன்றவர் தலைமையில் எவ்வளவோ போராடியும் கடந்த பல வருங்களாக அந்த அணியால் முதல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த நிலைமையில் இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய அனுபவம் கொண்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய பெங்களூரு முதல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் லீக் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு மும்பையின் உதவியுடன் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் ரஜத் படிதார் 114* ரன்கள் உதவியுடன் லக்னோவை தோற்கடித்து குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.

தவறிய டிகே:
அதிலும் 2020, 2021 ஆகிய வருடங்களில் இதே எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது அணி இம்முறை அந்தக் கண்டத்தை தாண்டியது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிராக மே 27இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் சொதப்பிய அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்து முதல் கோப்பையை வெல்ல முடியமால் வரலாற்றில் 15-ஆவது முறையாக வெளியேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, டு பிளசிஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ரஜத் படிடார் மீண்டும் அசத்தலாக பேட்டிங் செய்து 58 (42) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதனால் 13 ஓவரில் 107/2 என்ற நல்ல நிலைமையில் இருந்த அந்த அணியை இந்த வருடம் முழுவதும் அதுபோன்ற கடைசி கட்டத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து எதிர்பாராத வெற்றிகளை பெற்றுக்கொடுத்து சிறந்த பினிஷராக வலம் வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேட்டிங் செய்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முக்கியமான போட்டியில் வெறும் 6 (7) மட்டுமே எடுத்த அவர் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் கடைசி 7 ஓவர்களில் பெங்களூரு வெறும் 50/6 ரன்கள் மட்டும் எடுத்ததே தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

சொதப்பிய டிகே:
அதனால் 20 ஓவர்களில் 157/8 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டது. குறிப்பாக ஜோஸ் பட்லர் தனி ஒருவனாக 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் ராஜஸ்தானை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

1. ஆனால் ராஜஸ்தான் 103/1 என்ற நிலைமையில் இருந்த போது 66* ரன்கள் எடுத்திருந்த பட்லர் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்தார். அல்வா போல எளிதாக கைக்கு வந்த அந்த கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். ஒருவேளை அந்தத் தருணத்தில் அந்த கேட்சை அவர் சரியாக பிடித்திருந்தால் பெங்களூரு வெற்றி பெறுவதற்கு மேலும் போராடியிருக்கும். இது மட்டுமல்லாமல் இந்த வருடத்தில் ரிஷப் பண்ட் (3) சஞ்சு சாம்சன் (8) ஆகியோரைக் காட்டிலும் அதிக கேட்ச்களை தவற விட்ட விக்கெட் கீப்பராக (10) அவர் உள்ளார்.

மீண்டும் நிரூபணம்:
இந்த வருடம் லீக் சுற்றில் முதல் போட்டியிலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் குறைந்தது 3 – 4 வெற்றிகளை பெங்களூருவுக்கு தனியாளாக பெற்றுக்கொடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அவர் முக்கிய பங்காற்றிய காரணத்தால் 3 வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு மீண்டும் தேர்வாகி அசத்தியுள்ளார். ஆனால் முக்கியமான நாக்-அவுட் சுற்றில் லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டரில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது சொதப்பிய அவர் கேட்ச் கொடுத்த போதிலும் அதிர்ஷ்டமாக கேஎல் ராகுல் கோட்டை விட்டதால் தப்பி அதன்பின் 37* ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

இருப்பினும் ராஜஸ்தானுக்கு எதிரான மீண்டும் ஒரு அழுத்தம் நிறைந்த நாக்-அவுட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய அவர் விக்கெட் கீப்பராகவும் சொதப்பினார். இதேபோலத்தான் இந்தியாவிற்காகவும் 2004 முதல் விளையாடினாலும் அழுத்தம் நிறைந்த முக்கியமான போட்டிகளில் இதேபோல சொதப்பிய காரணத்தாலேயே கடைசிவரை அவரால் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் களமிறங்கிய அவர் 25 பந்துகளை சந்தித்த போதிலும் வெறும் 6 ரன்களுக்கு அவுட்டாகி இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அதை யாரும் பேசாத ரசிகர்கள் தோனி வந்ததால் தான் இவருக்கு வாய்ப்பு பறிபோய் விட்டது என்று பெரும்பாலும் பேசுகிறார்கள்.

இதையும் படிங்க : IPL 2022 : இறுதிப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவன் இதோ – ஜெயிக்கப்போவது யாரு?

மொத்தத்தில் தினேஷ் கார்த்திக் என்பவர் முக்கியமான போட்டியில் சொதப்புபவர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டதாக தமிழக ரசிகர்களே பெங்களூருவுக்கு முதல் கோப்பையை வென்று கொடுக்க தவறிய அவர் மீது சலித்துக் கொள்கிறார்கள்.

Advertisement