விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி நடைபெற்ற 49வது லீக் நடப்பு சாம்பியன் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை மிகவும் தடுமாற்றமாக விளையாடி 162/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 163 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 46, ரிலீ ரோசவ் 43, கேப்டன் சாம் கரண் 26* ரன்கள் அடித்து 17.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 10 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
கலாய்த்த பஞ்சாப்:
மறுபுறம் 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் பயணத்தில் பின்னடைவை சந்தித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சொந்த ஊரில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பெரும்பாலும் வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே அந்த மைதானம் சென்னை அணியின் கோட்டையாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அப்போட்டியில் அசத்தலாக விளையாடிய பஞ்சாப் அணி சென்னையை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது. அத்துடன் இந்த வெற்றியும் சேர்த்து கடைசியாக சென்னையை சந்தித்த 5 போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி கண்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற மும்பையின் சாதனையையும் பஞ்சாப் சமன் செய்தது.
முன்னதாக இப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே ட்விட்டரில் மாஸ்டர் எனும் தமிழ் திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கிளைமாக்ஸ் காட்சியில் நேருக்கு நேராக மோதும் புகைப்படத்துடன் “உங்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்று சென்னை அணிக்கு பஞ்சாப் அணி ஜாலியான எச்சரிக்கை கொடுத்திருந்தது. தற்போது வெற்றி கண்டதால் அதே படத்தில் விஜயை அடித்த பின் “சோளி முடிஞ்சு” என்று விஜய் சேதுபதி சொல்லும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள பஞ்சாப் அணி சென்னையை கலாய்த்துள்ளது.
இதையும் படிங்க: ராகுல் சாஹரை வைத்து தோனிக்கே ஸ்கெட்ச் போட்டு அசத்திய சாம் கரண் – டர்னிங் பாயிண்டான சூப்பர் கேப்டன்சி
அத்துடன் இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை தாங்கள் பிடிப்பதற்கு 7வது நம்பர் ஜெர்சியை கொண்ட தல தோனி தான் காரணம் என்றும் சிஎஸ்கே அணியை தாறுமாறாக பஞ்சாப் கலாய்த்துள்ளது. அதனால் கடுப்பாகியுள்ள சென்னை ரசிகர்கள் மே ஐந்தாம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து சிஎஸ்கே பதிலடி கொடுக்குமா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.