டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானதிலிருந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவை அழிவுக்கு வரும் என்ற அபாய குரல் இருந்த வேளையில் டி20 கிரிக்கெட் தொடரானது குறுகிய நேரத்தில் நடைபெற்று முடிவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றிற்கு கிடைப்பதை விட சற்று கூடுதல் வரவேற்பு டி20 வகையான கிரிக்கெட்க்கு கிடைத்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் 20 ஓவர் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மலையளவு ரன்களை குவித்து வருவதால் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்பெல்லாம் 200 ரன்கள் என்பதே இமாலய இலக்காக பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது 200 ரன்கள் என்பது வெற்றிக்கு உத்திரவாதம் இல்லாத ரன்களாக பார்க்கப்படுகிறது. அதோடு நடப்பு சீசனிலும் எட்டு முறை 250-க்கும் மேல் ரன்கள் அடிக்கப்பட்டன. இதனால் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.
மேலும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை வந்ததால் அணியில் 12 வீரர்கள் விளையாடுவதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அடித்தாடுகின்றனர். அதனால் இம்பேக்ட் வீரர் விதியை நீக்குமாறும் பல்வேறு வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட்டின் அங்கம் தான் என்பதை உணர்ந்து சில மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டுக்குமே சரிசமமான நிலையை கொண்டுவர வேண்டும். அந்த வகையில் பவுலர்கள் அடி வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனில் மைதானத்தின் எல்லைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மைதானத்தின் எல்லைகள் பெரிதுபடுத்தப்பட்டால் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையே சமமான போட்டி இருக்கும்.
இதையும் படிங்க : தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? சி.எஸ்.கே பேட்டிங் கோச் – மைக்கல் ஹஸி பேட்டி
அதனால் பவுலர்கள் அடி வாங்குவதை தவிர்த்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கும். எனவே எதிர்காலத்தில் மைதானங்களில் எல்லைகளை அதிகரித்தால் நிச்சயம் இன்னும் போட்டி சிறப்பாக மாறும் என கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.



