மோர்கன், கப்டில், மேக்ஸ்வேலை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. டி20 கிரிக்கெட்டில் 3 புதிய உலக சாதனை

Rohit Sharma Morgan
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா இரட்டை சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 22/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய போதிலும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 121* (69), ரிங்கு சிங் 69* (39) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்ஃபதின் நைப் 55* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சரியாக 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த அப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததால் மீண்டும் போட்டி டையில் முடிந்தது.

- Advertisement -

ரோஹித் உலக சாதனை:
அதன் பின் மீண்டும் நடந்த சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா அதிரடியுடன் இந்தியா 12 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரவி பிஸ்னோய் 2 விக்கெட்களை எடுத்து 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வெல்ல உதவினார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக இந்த போட்டியில் அடித்த 8 சிக்ஸர்களையும் சேர்த்து மொத்தம் 90 சிக்ஸர்களை கேப்டனாக அடித்துள்ள ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 90*
2. இயன் மோர்கன் : 86
3. ஆரோன் பின்ச் : 82

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இந்த 6 சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த துவக்க வீரர் என்ற நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் சாதனையையும் தகர்த்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 162*
2. மார்ட்டின் கப்டில் : 161
3. பால் ஸ்டெர்லிங் : 122
4. ஆரோன் பின்ச் : 116
5. எவின் லெவிஸ் : 111

இதையும் படிங்க: கிங் கோலியின் 2 வாழ்நாள் சாதனையை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித்.. பாபர் அசாமின் உலக சாதனை சமன்

மேலும் ஏற்கனவே 4 சதங்கள் அடித்திருந்த ரோகித் சர்மா இதையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் இந்தியாவின் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் சாதனைகளை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மேக்ஸ்வெல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement