
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் வகையில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி லாகூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு வில் எங் 4 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த ரச்சின் ரவீந்திரன் 25 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – டேரில் மிட்சேல் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை அடித்தார்கள்.
அதில் வில்லியம்சன் 58 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த டாம் லாதம் டக்வுட்டானாலும் மறுபுறம் அசத்திய டேரில் மிட்சேல் 81 ரன்கள் பெவிலியன் திரும்பினார். ஆனால் அவர்களுக்குப் பின் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கினார்.
குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி வீசிய கடைசி ஓவரில் மட்டும் அவர் 4, 6, 6, 2, 4, 1 என 23 ரன்கள் தெறிக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்தார். தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய அவர் வெறும் 72 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2வது அதிவேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 70 பந்துகளில் 100 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 106* (74) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் மைக்கேல் பிரேஸ்வெல் 31 (23), கேப்டன் சான்ட்னர் 8* (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் நியூசிலாந்து 330-6 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்தாலும் 88 ரன்கள் வாரி வழங்கினார்.
இதையும் படிங்க: விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எத்தனை சதங்களை அடிப்பார் – சுரேஷ் ரெய்னா அளித்த பதில்
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பாகிஸ்தான் பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சோகைல் டன்வீர் 87 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும். அடுத்ததாக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.