TNPL 2023 : கடைசி பந்தில் மாறிய வெற்றி, எலிமினேட்டரில் அதிரடி காட்டிய நெல்லை – மதுரை வீரத்தை நூலிழையில் அடக்கியது எப்படி?

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் துவங்கியுள்ளன. அதில் ஜூலை 8ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎப் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் பிளே ஆஃப் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4வது இடத்தை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பேன்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெல்லைக்கு முதல் ஓவரிலேயே சூரியபிரகாஷ் கோல்டன் டக் அவுட்டாகி ஆகிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதே போல மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் அருண் கார்த்திக்கும் 4 பவுண்டரியுடன் 18 (12) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த அஜித்தேஷ் குருசாமி மற்றும் நிதீஷ் ராஜகோபால் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி விரைவான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் அரை சதமடித்த அஜித்தேஷ் குருசாமி 7 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (30) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

கடைசி பந்தில் த்ரில்லர்:
அந்த நிலைமையில் வந்த சோனு யாதவ் 17 (13) ரன்களில் அவுட்டானாலும் அவருடன் மறுபுறம் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமாக செயல்பட்ட நித்திஷ் ராஜகோபால் அதிரடியாக 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76 (50) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார்கள். இறுதியில் ரித்திக் ஈஸ்வரன் அதிரடியாக 3 பவுண்டர் 2 சிக்சருடன் 29 (10) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் நெல்லை 211/6 ரன்கள் எடுக்க மதுரை சார்பில் அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 212 என்ற கடினமான இலக்கை துரத்திய மதுரைக்கு 2வது ஓவரிலேயே கேப்டன் ஹரி நிஷாந்த் 4 (4) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்த போதிலும் அடுத்ததாக வந்த ஆதித்யா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (26) ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த ஸ்வப்னில் சிங் தனது பங்கிற்கு அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஆதித்யா நங்கூரமாகவும் விரைவாகவும் ரன்கள் குவித்ததால் வெற்றியை நெருங்கிய மதுரைக்கு கடைசி 5 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மதுரைக்கு 3வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஆதித்யா 6 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (50) ரன்களில் பொய்யாமொழி வீசிய 18வது ஓவரில் அவுட்டானது திருப்பு முனையாக அமைந்தது.

அதை பயன்படுத்திய நெல்லை கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசியதால் மோகன் பிரசாத் வீசிய கடைசி ஓவரில் மதுரையின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் ரன்கள் எடுக்காத கௌஷிக் அடுத்த பந்தில் சிக்சர் அடித்து 3வது பந்தில் சிங்கள் எடுத்தார். ஆனால் 4வது பந்தில் ஸ்வப்னில் சிங் 1 பவுண்டரி 4 சிக்சருடன் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்ததாக வந்த சரவணன் அசால்ட்டான சிக்ஸரை பறக்க விட்டார்.

இதையும் படிங்க:IND vs WI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் 2 ஆண்டுகள் கழித்து இடம்பிடித்த – வெயிட்டான வீரர்

ஆனாலும் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது சரவணன் 1 ரன் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக பரபரப்பான கடைசி ஓவரில் 19 ரன்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மோகன் பிரசாத், பொய்யாமொழி மற்றும் சோனு யாதவ் ஆகியோர் நெல்லைக்கு அதிகபட்சமாக 1 விக்கெட் எடுத்தனர். அதன் வாயிலாக குவாலிபயர் 1 போட்டியில் வென்று நேரடியாக ஃபைனலுக்கு சென்ற கோவையிடம் தோல்வியை சந்தித்த திண்டுக்கலுக்கு எதிராக ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் குவாலிபர் 2 போட்டியில் விளையாடுவதற்கு நெல்லை தேர்வானது. மறுபுறம் பேட்டிங்கில் முழு மூச்சுடன் போராடியும் கடைசி நேரத்தில் தில்லாக செயல்பட தவறிய மதுரை இத்தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

Advertisement